ICC Champions Trophy: BCCI to announce Indian cricket team’s 15-man squad today

 

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி நிச்சயம் பங்கேற்கும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

மினி உலக கோப்பை என புகழ்பெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர் லண்டனில் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது. இதில் ஐசிசி தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் மட்டும் களமிறங்க உள்ளன. கடந்த 2013ம் ஆண்டு நடந்த தொடரில் டோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிர்வாக அமைப்பு மற்றும் வருவாய் பகிர்வில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இது தொடர்பாக ஐசிசி கூட்டத்தில் நடத்தப்பட்ட வாக்குப் பதிவில் பிசிசிஐ பெரும் பின்னடைவை சந்தித்தது. இலங்கை தவிர்த்து மற்ற கிரிக்கெட் வாரியங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு எதிராக அணி திரண்டன.

எட்டு ஆண்டுகளில் சுமார் 2000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்பதால் கடும் அதிர்ச்சி அடைந்த பிசிசிஐ நிர்வாகம், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தது. அணியை அறிவிப்பதற்கான கெடு ஏப்ரல் 25ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பிசிசிஐ மட்டும் அணியை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்தது.

இதற்கு உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழுவினர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும்; ஐசிசி-க்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தினர். டெல்லியில் நேற்று நடந்த பிசிசிஐ சிறப்பு பொதுக் குழு கூட்டத்தில் இது குறித்து விவாதித்த நிர்வாகிகள், நிர்வாகக் குழுவின் உத்தரவுகளை முழுமையாக ஏற்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்பதை உறுதி செய்த பிசிசிஐ, 2 நாட்களுக்குள்ளாக வீரர்கள் தேர்வு நடத்தப்பட்டு அணி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். எனவே ,சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில் பங்கேற்பதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.