டெல்லி: ஐபி, சிபிஐ போன்ற தன்னாட்சி பெற்ற புலனாய்வு அமைப்புகள் நீதிமன்றத்துக்கும், நீதிபதிகளுக்கும் உதவுவது இல்லை உச்சநீதிமன்றம் நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நீதிபதி  ஆனந்த் என்பவர் காலை வாக்கிங் சென்றபோது, ஆட்டோ மோதி கொலை செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை விவகாரத்தில்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு  தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.  இவ்விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கடந்த 30-ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த  தலைமை நீதிபதி ரமணா,  நாட்டில் குண்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் குற்றவியல் வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு வாட்ஸ்அப் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  நீதிபதிகள் உளவியல் ரீதியாக மிரட்டப்படுகின்றனர்.  இதுதொடர்பாக புகார் அளித்தாலும், காவல்துறையோ, சிபிஐ-யோ, உளவு அமைப்புகளோ தங்களுக்கு உதவுவதில்லை என்றும் தலைமை நீதிபதி திரு.என்.வி.ரமணா வேதனை தெரிவித்தார்.

ஐபி, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. இது,மிகவும் வருந்தத்தக்க நிலை மேலும், ” நாட்டில் புதிய போக்கு இன்று காணப்படுகிறது.  அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நீதிபதிகள் முறையாக புகார்கள் அளித்தாலும் முறையாக விசாரிக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தது.மனு தாரருக்கு பாதாகமான விளைவை ஏற்படுத்தும் வகையில் தீர்பளிக்கப்பட்டால் நீதிபதி அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றார்.

அப்போது பேசிய மத்தியஅரசின் வழக்கறிஞர் கே. வேணுகோபால்,  தலைமை நீதிபதி ரமணாவின் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்வதாக கூறினார். மேலும், நீதிபதிகளுக்கான ஆபத்து எப்போதும் தொடர்ந்து கொண்டிருப்பதால் பாதுகாப்பு முயற்சிகளில் எப்போதும் தொய்வு ஏற்பட கூடாது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி,  காவல்துறை (அல்லது) புலனாய்வு அமைப்பிடம் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டாலும், அந்த வழக்குகள்  முறையாக விசாரிக்கப்படுவதில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர்,  “இளம் வயது நீதிபதி உத்தம் ஆனந்த்-ன் மரணத்தைப் பாருங்கள். இது முழு முழுக்க அரசுகளின் தோல்வி. நீதிபதிகளின் குடியிருப்பு பகுதிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டாமா” என்று கேள்வி எழுப்பியதுடன்,  அச்சுறுத்தல்களை சந்திக்கும் நீதிபதிகளின் பெயர் பட்டியல் தம்மிடம் இருப்பதாக தெரிவித்த அவர், நீதிபதிகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.

இதையடுத்து பதில் அளித்த ஜார்க்கண்ட் மாநில அட்வகேட் ஜெனரல், “இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு விரைந்து செயல்படுகிறது. சம்பவம் நடைபெற்ற தினத்தன்றே சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டது. நடைபயிற்சி சென்ற நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்த இருவரை  சிறப்பு புலனாய்வு படை கைது செய்தது. மேலும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் பரிந்துரையை மாநில அரசு வழங்கியுள்ளது என்றார்.