விளையாட்டும்… மோடியின் திசை திருப்பும் அரசியலும்

Must read

 

2014 ம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் ஏறிய பாஜக இந்த ஏழாண்டுகளில் மோடி தலைமையில் நாட்டு மக்களுக்குச் செய்தது என்ன என்பதே புரியாமல் உள்ளது.

நேருவுடன் ஆரம்ப நாட்களில் மோதிப்பார்த்து எதுவும் எடுபடாமல் போன நிலையில் தற்போது விளையாட்டையும் விளையாட்டுப் போட்டிகளையும் வைத்து அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜிவ் கேல்ரத்னா என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்த விருதை மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா என்று மாற்றியிருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

தலைநகர் டெல்லி வீதிகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டமும் அவர்களது கோரிக்கையும் அதே நகரின் மற்றொரு வீதியில் வசிக்கும் பிரதமரின் காதுகளில் விழாமல் உள்ள நிலையில்,

2012 ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே மேஜர் தியான் சந்த் நினைவாக ஆகஸ்ட் 29 ம் தேதியை தேசிய விளையாட்டு தினமாக அறிவித்திருந்தது கூட தெரியாமல் எங்கிருந்தோ எழுந்ததாகச் சொல்லப்படும் இந்தப் பெயர் மாற்றக் கோரிக்கை மட்டும் காதில் விழுந்தது விந்தையாக உள்ளது.

டெல்லி நகர வீதிகளில் ஒலிக்கும் பலதரப்பட்ட மக்களின் எதிர்ப்புக் குரல்கள் கேட்காமல் போன பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் அவரது அறைக்கு வெளியில் எழுப்பப்படும் கூக்குரல்களும் கேட்காமல் போனது அதைவிட ஆச்சரியமாக உள்ளது.

இப்படி சாமானிய மக்களின் கோரிக்கைகள் மட்டுமன்றி விவசாயிகள், மக்கள் பிரதிநிகளின் கோரிக்கையும் செவிகளில் விழாதவண்ணம் நாள் முழுவதும் அவர் காதுகளில் விழுந்தது என்ன என்பதை பெகாசஸ் ஸ்பைவேர் வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது.

பெகாசஸ் விவகாரம் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரளவைத்திருக்கும் நிலையில் தன்னை கண்டுகொள்ளாத மக்களை திசைதிருப்பும் முயற்சியாக பெயர்மாற்ற விவகாரங்களை கையிலெடுத்திருக்கிறார் மோடி.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், காமென்வெல்த் போட்டிகள் என்று பல்வேறு சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்திய பெருமை மிகு பிரதமர்கள் மத்தியில் விளையாட்டுப் போட்டிகளுக்காக நரேந்திர மோடி செய்த சாதனைகள் என்ன என்பதை சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும், சர்வதேச போட்டிகளை இந்தியாவில் நடத்தியதன் மூலம், உள்கட்டமைப்புகளை பலப்படுத்தியதோடு இளைஞர்களுக்கும் உத்வேகம் அளித்த தலைவர்களின் வரிசையில் மோடிக்கு இடம் உண்டா என்பதே கேள்விக்குறிதான் என்றும் கூறிவருவருகின்றனர்.

கடந்த ஏழாண்டுகளில் நேரு, இந்திரா, மன்மோகன் சிங் என்று அனைத்து காங்கிரஸ் பிரதமர்களுடனும் கொள்கையளவில் மோதி தோல்வி கண்ட நரேந்திர மோடி தனது தோல்விகளில் இருந்து ஆறுதல் பெற இதுபோன்ற திசை திருப்பும் அரசியலில் ஈடுபட்டுவருவதாகக் குற்றம் சாட்டிவருகின்றனர்.

பெகாசஸ் ஒட்டுகேட்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் கோரிக்கை போன்றவற்றிலிருந்து எதிர்க்கட்சியினரையும் மக்களையும் திசைதிருப்ப நினைக்கும் பாஜகவின் எந்த முபற்சியும் இனி எடுபடாது என்றும் இதுபோன்ற திசை திருப்பும் நாடகத்தை இனியும் தொடராமல் மக்களின் குரலுக்கு செவிகொடுத்து நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபடுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

More articles

Latest article