டில்லி,

ஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை இன்னும் ஒரு மாதத்திற்குள் அளிக்கா விட்டால், அவர்களின் பதவி உயர்வு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும், ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும், தங்களது அசையும், அசையா சொத்துகள் விவரத்தை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும்.

ஆனால், இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது சொத்து விவரங்களை வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரிகள் சொத்து விபரங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் அளிக்க வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மத்திய  ஊழியர்கள் மற்றும் பயிற்சித்துறை மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்துத் துறைகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அதில்,  ஜனவரி 31ஆம் தேதிக்குள் அந்தந்தத் துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளின் அசையாச் சொத்து குறித்த விபரங்களைக் கேட்டுப் பெறுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொத்து விபரங்களைத் தராத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆட்சேபணை இல்லா சான்றிதழ் மறுக்கப்படும் எனவும், இதனால் அவர்கள் பதவி உயர்வையோ, வெளிநாடு களில் பணியமர்த்தலையோ பெற முடியாது எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.