ஸ்ரீவில்லிபுத்தூர்:
தேனி பாராளுமன்ற தொகுதியில் என்னை எதிர்த்து டிடிவி தினகரன் நின்றாலும் கவலை யில்லை.. நான்தான் வெற்றி பெறுவேன் என்று துணைமுதல்வர் ஓபிஎஸ் மகனும், தேனி தொகுதி அதிமுக வேட்பாளரான ரவிந்திரநாத் தில்லாக தெரிவித்து உள்ளார்.
அதிமுக கட்சி சார்பில் தேனி மக்களவை தொகுதிக்கு துணை முதல்வர் ஓ.பி.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக கடந்த 2 நாட்களாக ஓபிஎஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், இன்று டிடிவி தினகரன் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், ஓபிஎஸ் மகனை எதிர்த்து, தங்கத்தமிழ்செல்வன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈபிஎஸ்,ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசுக்கு அவ்வப்போது நெருக்கடியை கொடுத்து வரும் தங்கத்தமிழ்செல்வன், ஓபிஎஸ் மகனை எதிர்த்து களமிறக்கப்பட்டுள்ளது தமிழக அரசிய லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்சுக்கு செக் வைக்கவே தங்கத்தமிழ் செல்வனை டிடிவி இறக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேனி பாராளுமன்ற தொகுதி சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பக தோப்பில் உள்ள அவர்களின் குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தினார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலிலும் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தார்.
அப்போது அவரை மடக்கிய செய்தியாளர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். தேனி தொகுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்ற கேள்விக்கு, எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றவர், தேனி மட்டுமல்ல 40 எம்.பி. தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றார்.
தொடர்ந்து, உங்களை எதிர்த்து, டிடிவி கட்சி, தங்கதமிழ்செல்வனை வேட்பாளராக அறிவித் துள்ளதே…இதனால் உங்கள் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ரவீந்திரநாத், வேட்பாளர் யார் என்பது குறித்து தனக்கு கவலை இல்லை என்றவர், தங்கத்தமிழ் செல்வன் என… டிடிவி தினகரனே வந்து என்னை எதிர்த்து போட்டி யிட்டாலும் அவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்… நான்தான் வெற்றி பெறுவேன் என்று உறுதிபட கூறினார்.