சென்னை: விரைவில் எனது அரசியல் பயணத்தை தொடங்குவேன் என்றும், பொதுச்செயலாளர் பதவி குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல் -அமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அ.தி.மு.க. கை கைப்பற்றிய வி.கே.சசிகலா, தன்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்வது என தீர்மானம் நிறைவேற்றினார். ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கி வைத்திருந்த சசிகலா உறவினர் டிடிவி தினகரனை துணை பொதுச் செயலாளராக நியமித்தார். அதைத் தொடர்ந்து மாநில முதல்வராகும் ஆசையில், அப்போது முதல்வர் பதவியில் இருந்த ஓபிஎஸ்-ஐ மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கினார். ஆனால், ஓபிஎஸ் சசிகலாவை எதிர்த்து, மவுன யுத்தம் தொடங்கியதும், அதிமுக இரண்டாக உடைந்தது. இதற்கிடையில், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்ததும், அவர் பெங்களூரு சிறைச்சாலைக்கு செல்லும் முன்பு எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு சென்றார். பின்னர் உடைந்த அதிமுக இணைந்ததும், சசிகலா மற்றும் மன்னார்குடி மாபியாக்கள் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் கூட்டப்பட்டது. அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன்படி சசிகலாவை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அதனால் சசிகலா இனிமேல் அதிமுக பொதுச் செயலாளர் என போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா அதிமுகவை கைப்பற்றுவேன் என வாய்சவடால் பேசி வருகிறார். அதற்காக பல்வேறு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, அதிமுக நிர்வாகிகளை தன்பக்கம் இழுக்க முயற்சித்து வருகிறார். ஆனால், அவரது கனவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அவர்மீதான பல்வேறு வழக்குகள் அவரை செயல்பட முடியாதவாறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.
இருந்தாலும், தனது ஆதரவாளர்களைக் கண்டு, தமிழகம் முழுவதும் கோவில் கோவிலாக ஆன்மிக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இது அவர் ஏற்கன செய்த பாவத்திற்கு விமோசனம் கேட்டு கோவில் கோவிலாக ஏறி இறங்கி வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்ந்து, தனிப்படை காவல்துறையினர் சசிகலாவின் வீட்டுக்கே சென்று 2 நாட்கள் விசாரணை நடத்தினர். அப்போது ஏராளமான கேள்விகள் கேட்டதாகவும், சசிகலா, குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், சசிகலா சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அரசியலில், கோடநாடு வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் கூறிய சசிகலா, கோடநாடு வழக்கு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிகு பதில் அளிக்க மறுத்துவிட்டதுடன், விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன் என்று கூறியதுடன், அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு தொடர்பாக விரைவில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்’ என்று கூறி உள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த சசிகலா திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அரசியல் பயணம் தனியாகவா? அல்லது கூட்டணி கட்சியுடனா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எப்போதும்போல “பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.
‘உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா?’ என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் சொல்ல மறுத்த சசிகலா “கோயிலுக்கு செல்கிறேன். இதுகுறித்து அப்புறம் பதிலளிக்கிறேன்” என்று கூறிவிட்டு நழுவிச் சென்றார்.
சசிகலாவின் பொறுத்திருந்து பாருங்கள் என்ற பதில், எப்போதும்போல வாய்சவடாலாகவே கருதப்படுகிறது.