சென்னை:
டிடிவியின் வலதுகரமான தங்கத்தமிழ்செல்வன் விவகாரம் தமிழக அரசியல் களத்தில் சூடு பறந்து வரும் நிலையில், அவரை அமமுகவில் இருந்த கட்சியில் இருந்து நீக்கப்போவதாக டிடிவி அறிவித்தார்.
இந்த நிலையில், தங்கத்தமிழ்செல்வன் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாவார் என செய்திகள் பரவிய நிலையில், தான், திமுக, அதிமுகவில் இணையப்போவதில்லை என்று தெரிவித்து உள்ளார்.
கடந்த வாரம் தங்கத்தமிழ்செல்வன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசிய நிலையில், தற்போதைய அரசியல் நிலவரம், அவர் அதிமுகவில் ஐக்கியமாவார் என உறுதியான நிலையில், ஓபிஎஸ் தரப்பினர், அவரை அதிமுகவில் சேர்க்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான போஸ்டர்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தங்கத்தமிழ் செல்வன் தன்னைக் கண்டால் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுவார் என கடுமையாக டிடிவி தினகரன் விமர்சித்த நிலையில், அவரது இடதுகரமான சென்னையை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலும் தங்கத்தமிழ்செல்வன் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.
தங்க.தமிழ்ச்செல்வன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவர், எம்எல்ஏ பதவி போய்விட்டதாக குழந்தை போல அடம் பிடித்து பேசி வருகிறார் என்றும், அவரை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள் என சாடினார். மேலும் பேசிய வெற்றிவேல், எம்.பி பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேரம் பேசி வருவதாகவும், காசு, பணம், துட்டுக்காக அமமுக-வையும், தினகரனையும் தங்க.தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.
இநத் நிலையில், தங்கத்தமிழ்செல்வன் மீண்டும் ஆவேசமாக பதில் அளித்தார். அப்போது, தினகரன் தனியாக முடிவெடுக்கிறார் அதை கேட்டதால் கோபம் என்று தெரிவித்தவர், வெற்றிவேல் யாரையும் ஒருமையில் பேசக் கூடாது என்று பதில் கூறினார்.
மேலும், புதிய கட்சி தொடங்க வேண்டாம் என டிடிவி தினகரனிடம் நான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிவித்தவர், அமமுகவில் இருந்து என்னை இன்னும் நீக்கவில்லை என்று கூறினார்.
நாங்கள் 18 எம்எல்ஏக்கள் இல்லையென்றால் தினகரனே இல்லை என்றாகி இருக்கும். அவரிடம் பெட்டிப் பாம்பாக அடங்குவதற்கு சம்பளம் வாங்கி கொண்டா கட்சியில் இருக்கிறேன்? அமமுகவில் நிர்வாகம் மொத்தமாக சரியில்லை.இன்மேல் தினகரனுடன் மீண்டும் இணைந்து செயல்பட வாய்ப்பே இல்லை என்றவர், அவர் , ‘ஒன் மேன் ஆர்மி’யாக தன்னை நினைத்து செயல்படுவதால், பலர் வெளியே வந்துவிட்டனர். எஞ்சியவர்களும் விரைவில் வெளியேறி அந்தக் கட்சியின் கூடாரமே காலியாகி விடும் என்றார் தங்க. தமிழ்ச்செல்வன்.
சசிகலாவை சந்தித்து பேசினீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, சசிகலாவை சந்திக்க முடியவில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்று தெரிவித்தவர், தற்போது நான், திமுகவுடனும், அதிமுகவுடனும் நான் இணையப்போவதில்லை என்று கூறினார்.