சென்னை:

காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள தென்சென்ன மாவட்ட காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜன் விரைவில் நான்தான் தமிழக காங் தலைவராக வருவேன் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். இது தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

காமராஜரின் 117வது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை யொட்டி, தென் சென்னை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அடையாறில் உள்ள கராத்தே தியாகராஜன் இல்லத்தில் நடைபெற்றது.

அப்போது,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே தொடர வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு சுயமரியாதை வேண்டும்.

தன்மானம் வேண்டும் என்ற கருத்தோடு வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கண்ணியமான கூட்டணி அமைய வேண்டும்.

காங்கிரஸ் தலைமை காங்கிரசிற்கு காலம் காலமாக உழைக்கும் தொண்டர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டும் 

உயரிய நோக்கில் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கராத்தே தியாகராஜன் பேசியதற்கு கட்சி விரோத நடவடிக்கையாக அவர் மீது தமிழக காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமையின் தவறான தகவலின் பேரில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை டெல்லி காங்கிரஸ் மேலிடம் ரத்து செய்ய வேண்டும்

உள்பட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதையடுத்து தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய கராத்தே தியாகராஜன், கருணாநிதியை தமிழர் இல்லை என்று கூறியவர் நடிகை குஷ்பு. இதற்கான ஆடியோ என்னிடம் உள்ளது. ஆனால் அவர்களுக்கெல்லாம் பதவிகள் வழங்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தவர், கே.எஸ். அழகிரியின்  பொறுப்புக்கு நான் கூடிய விரைவில் வருவேன் என்று கூறினார்.  அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கூடிய விரைவில் நியமிக்கப்படுவேன் என கராத்தே தியாகராஜன் விளக்கமாக தெரிவித்தார்.

கராத்தே தியாகராஜனின் பேச்சு காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.

மக்களவை தேர்தலுக்கு பிறகு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கராத்தே தியாகராஜன்,  உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கூறியதை தொடர்ந்து, காங்கிரஸ் திமுக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து,  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரியின் வற்புறுத்தலின் பேரில், தென் சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.