மும்பை

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோனி சரியாக விளையாடவில்லை எனப் பலரும் குறை கூறி வருகின்றனர்.   அதற்கேற்றாற்போல் அதற்கு பிறகு நடந்த எந்தப் போட்டியிலும் அவர் தேர்வு செய்யப்படவில்லை.   வரும் டிசம்பர் மாதம் வங்க தேசம் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுடன் போட்டியிடும் இந்திய அணியில் தோனி இடம் பெறுவது சந்தேகமாகவே உள்ளது.

இதுவரை தோனி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.  இந்நிலையில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட தோனி, “நான் மற்ற மனிதர்களைப் போன்றவன் அல்ல.   எனது உணர்ச்சிகளை மற்ற யாரையும் விட  நன்றாகவே கட்டுக்குள் வைத்திருப்பேன்.   ஆயினும் நானும் சில நேரம் நான் ஏமாற்றம் அடையும் போது எரிச்சல் அடைவேன். எனக்கும் சில நேரம் கோபம் வரும்.

தற்போதைய நிலையில் இந்த உணர்வுகளைக் காட்டுவதை விட நான் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதே முக்கியமாகும்.   அடுத்ததாக நான் என்ன புதிய திட்டம் இட வேண்டும்? அடுத்து யாரை நான் பயன்படுத்த வேண்டும்? இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து விட்டால் எனது உணர்வுகளை நான் நல்ல விதமாக கட்டுக்குள் வைத்திருப்பேன்.

ஒரு அணி வெற்றி பெற வேண்டும் என்பது அனைவரின் விருப்பம் என்றாலும் அது  எப்போதுமே நடைபெறாது.   இந்த வெற்றிக்காக ஒரு சிலர் மட்டுமே நன்கு உழைக்க முடியாது.  அனைவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும்.  தேவையான நேரத்தில் எடுக்கப்படும் ஒரு விக்கட் கூட வெற்றிக்கு வழி வகுக்கும்.” என தெரிவித்துள்ளார்.