மும்பை: மாநில மொழிகளில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதற்கு பிரதமர் மோடி, முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
மஹாராஷ்டிரா மற்றும் கோவா சார்பில் மும்பையில் நடந்த வழக்கறிஞர்கள் சங்கம் நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பேசும்போது, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிடுவதற்கு ஆதரவாக பேசியிருந்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த பேச்சு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வீடியோவை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பதிவிட்டுள்ள டிவிட்டில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்க செய்வதற்காக செய்ய வேண்டிய பணிகள் குறித்து, சந்திரசூட் பேசினார். இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என ஆலோசனைகளை கூறியுள்ளார். இது பாராட்டத்தக்க முயற்சி. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சாமானிய மக்கள் பயனடைவர் எனக்கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், இந்தியாவில் ஏராளமான மொழிகள் உள்ளன. அவை நமது கலாசாரத்திற்கு துடிப்பை ஏற்படுத்துகிறது. பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பாடங்களை ஒருவர், அவரது தாய்மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளில் படிப்பதை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவி6த்திருந்தார்.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் பிரதமர் மோடியின் பதிவை இணைத்து பதிவிட்டுள்ளதில்,.
அனைத்து இந்திய மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற மாண்புமிகு தலைமை நீதிபதியின் ஆலோசனையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இது உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நமது நீண்டகாலக் கோரிக்கையுடன், நமது நாட்டின் சாமானிய மக்களுக்கு நீதியை நெருங்கச் செய்யும் என தெரிவித்துள்ளார்.