துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.

முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி வந்தது, துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ருதுராஜ் 70 ரன்களும், அவருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா 63 ரன்களும் எடுத்தனர்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி 13.3 ஓவரில் அணியின் ஸ்கோர் 113 ஆக இருந்த போது உத்தப்பா அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து 18.1 ஓவரில் 149 க்கு ஐந்து விக்கெட்டை இழந்து மீதமுள்ள 11 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா என்ற நிலையில் களமிறங்கிய தோனியின் அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

6 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி 18 ரன்கள் எடுத்த தோனி 19.4 ஓவரில் 173 என்ற வெற்றி இலக்கை எட்டினார். இந்த வெற்றியின் மூலம் சிஎஸ்கே அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கிறது.

இறுதி ஓவரில் தோனியின் விளையாட்டு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த விராட் கோலி, “ஆட்டத்தை சிறப்பாக முடிப்பதில் வல்லவரான தோனியின் ஆட்டத்தைப் பார்த்து அசந்து போனேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

இன்று நடைபெறும் “எலிமினேட்டர்” போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது கோலி-யின் ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூரு அணி. இதில் வெற்றி பெரும் அணி புதன் கிழமை நடைபெறும் இரண்டாவது தகுதிப் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து விளையாடும்.

இரண்டாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் அக்டோபர் 15 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் போட்டியில் மோத இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வழிகாட்டியாக தோனி நியமிக்கப்பட்டிருப்பதால், வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் இறுதியாட்டம் தோனிக்கு கடைசி ஆட்டமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.