சென்னை:

சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் , “முதல்வர் பதவியிலிருந்து என்னை விலகச்சொல்லி நிர்ப்பந்தப்படுத்தி சசிகலா தரப்பு கையெழுத்து வாங்கியது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

“சசிகலா தரப்பினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தது. பதவியிலிருந்து விலகுவதாக சில அமைச்சர்களிடம் தெரிவத்தேன். அவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி கூறினார்கள்.

என் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டாலும், என்னால் கட்சிக்கோ, ஆட்சிக்கோ சிறு பங்கமும் ஏற்படக்கூடாது  என்று  வெளிப்படையாக  என் குமுறலை தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அவர்கள் ஏற்பாடு செய்து, சசிகலாவை முதல்வராக்க கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் வந்தது.

அது, எண்ணூர் துறைமுகத்தில் இரு கப்பல்களுக்கிடையே உராய்வு ஏற்பட்டு கடலில் எண்ணெய் கசிந்த நேரம். அது குறித்த விவகாரத்தை தீவிரமாக கவனித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது அவர்கள் என்னை கார்டன் இல்லத்துக்கு அழைத்தார்கள். அங்கே கட்சி முக்கிய பொறுப்பார்களும் சசிகலா குடும்பத்தினரும் இருந்தார்கள். அவர்கள், “ சின்னம்மா முதல்வராக அனைவரும் ஏற்பாடு செய்ய வேண்டும்.  நீங்கள்தான் முன்னின்று அதை செய்ய வேண்டும்” என்றார்கள்.

அதற்கு நான், “இப்போது இதற்கு என்ன அவசியம்?” என்று கேட்டேன். மேலும், “எனக்குத் தெரியாமலேயே எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறீர்கள். கையெழுத்தும் வாங்கியிருக்கிறீர்கள்.. இப்போது சின்னம்மா முதல்வராக நான் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்கிறீர்களே” என்றேன்.

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பேசிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் என்னை நிர்ப்பந்தப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள்.

இதையெல்லாம் அம்மாவின் ஆன்மாவிடம் சொல்லவே  சமாதிக்கு வந்தேன்.  இதை மக்களிடம் சொல் என்று அம்மாவின் ஆன்மா கட்டளையிட்டது. ஆகவே இப்போது வெளிப்படையாக சொல்கிறேன்.

அதிமுக  தொண்டர்களும், மக்களும் விரும்பும் ஒருவர் முதல்வராக வேண்டும்.  அது நானாக இருக்க வேண்டும் என்று  அவசியமில்லை. அப்படியான வேறு ஒருவர் வருவதை நான் ஆதரிக்கிறேன். அதுதான் தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நல்லது. கட்சிக்கும் நல்லது.

அதற்காக தன்னந்தனியாக நின்று போராடுவேன்” என்று ஓ.பி.எஸ். தெரிவித்தார்.