இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.
இரண்டாவது நாளான இன்று இங்கிலாந்து வீரர் ஜாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் அஸ்வின்.
இதற்கு முன் அனில் கும்ப்ளே 105 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அவர் மொத்தம் 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
500 விக்கெட்டுகளில் 114 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்துள்ளார் அஸ்வின், தவிர இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை 12 முறை வீழ்த்தியுள்ளார்.
இந்த சாதனையை அஸ்வின் தனது 98வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஏற்படுத்தியதை அடுத்து குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இலங்கையின் முத்தையா முரளிதரன் மட்டுமே குறைந்த போட்டிகளில் (87) 500 விக்கெட்டுகளை கடந்திருந்தார்.
போட்டியின் முடிவில் பேட்டி அளித்த அஸ்வின் “ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆகவேண்டும் என்பது தான் எனது கனவாக இருந்தது. சி.எஸ்.கே. அணியில் முதலில் விளையாடிய போது உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இலங்கையின் முத்தையா முரளிதரன் பந்துவீச தயங்கியதை அடுத்து என்னை பந்துவீச அழைத்தார்கள். அப்படி ஒரு விபத்தில் தான் நான் பந்துவீச்சாளராக மாறினேன்” என்று கூறியுள்ளார்.