சென்னை: புயல் வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய குழு அனுப்பி ஆய்வு செய்ய வலியுறுத்தினேன் என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமரிடம் பேசியது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் வட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பு சந்தித்துள்ளது. இதற்கிடையில் முன்னறிவிப்பு இன்றி சாத்தனுர் அணையும் திறந்து விடப்பட்டதால், சேதம் மேலும் அதிகரித்து உள்ளது. கனமழை, வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அணையில் இருந்து வெளியேறிய நீரால், மேலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் டெல்டா மாவட்டங்களும் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், புயல் நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை பிரதமர் மோடி, புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசினார். தமிழகத்தில் தற்போதைய சூழல் எப்படி உள்ளது? மழை, வெள்ளத்தால் எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்? விவசாய நிலங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது? என்பனவற்றை முதல்-அமைச்சரிடம் பிரதமர் தெளிவாக கேட்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் முதல்-அமைச்சரிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தரப்பில் வெளியான தகவல்களில், தமிழ்நாட்டிற்கு உரிய உதவிகள் வழங்கப்படும் என முதல்-அமைச்சரிடம் பிரதமர் உறுதி அளித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் புயல், வெள்ள பாதிப்புக்கள் குறித்து பிரதமர் மோடியிடம் என்ன கேட்கப்பட்டது என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், – பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்
– வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தி உள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி – புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்த கோரிக்கையை பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.