சென்னை:

வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கியதை மறைத்ததாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது கருப்பு பணத் சட்டத்தின்படி வருமான வரித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் குடும்பத்தினர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளி நாடுகளில், தனது மனைவி, மகன், மருமகள், பேத்தி போன்றோர் பெயரில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார். இதை கண்டறிந்த வருமான வரித்துறையினர்,   கருப்பு பண சட்டத்தின்கீழ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள  கேம்பிரிட்ஜ் நகரில் ஹோல்பன் குளோஸ் பார்டன் பகுதியில் ரூ.5.37 கோடிக்கு ப.சிதம்பரத்தின் மனைவி  நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோரது பெயரில்  சொத்து வாங்கப்பட்டதாகவும், மேலும் அதே பகுதியில் ரூ. 80 லட்சம் மதிப்பில் வேறு ஒரு சொத்தும் வாங்கப்பட்டது என்றும், அமெரிக்காவில் உள்ள நானோ ஹோல்டிங் நிறுவனத்தில் ரூ.3.28 கோடி முதலீடு செய்யப்பட்டதாகவும் வருமான வரித்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளது.

இந்த விவரங்களை அவர்கள்  வருமானவரிக் கணக்கு தாக்கலின்போது தெரிவிக்காமல் மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து அவர்கள் மீது,  கடந்த 2015-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட  கருப்பு பண மோசடி சட்டப் பிரிவுகீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வருமான வரித்துறை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

ஆனால், அதை எதிர்த்து சிதம்பரம் குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஏற்கனவே நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த   நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து, விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், கருப்பு பணம் தடுப்புச் சட்டம் பிரிவு 50ன் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த சட்டத்தின்படி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 120 மடங்கு வரி அபராதமும்  10 ஆண்டு வரை சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.