சென்னை:
நான் ஒரு நடிகன் என்பதை விட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். . பரமஹம்ச யோகானந்தரினின் “தெய்வீக காதல்” என்ற ஆன்மீக புத்தகத்தை ரஜினி வெளியிட்டு பேசியது…
‘‘எனக்கு பணம், புகழ், ஆன்மிகம் இவற்றில் எது வேண்டும் என்று கேட்டால் ஆன்மிகம் தான் வேண்டும் என்பேன். ஆன்மிகத்தில் அதிக சக்தி கிடைக்கிறது என்பதால் அதை பின்பற்றவது எனக்கு பிடிக்கும். நான் குழப்பவாதி கிடையாது. ஆன்மீக வழியில் என் முதல் குரு அண்ணன் சத்யநாராயணா. அவரது மறைவுக்கு பின் பல குருக்களை பின்பற்றி வந்திருக்கிறேன்’’ என்றார்.
ரஜினி மேலும் பேசுகையில்,‘‘ எனது ஆன்மீகத் தேடல் தொடரும். இமயமலையில் பல ஆன்மீக ரகசியங்கள் இருக்கிறது. ராகவேந்திரரிடம் ஆன்மீகத்தை கற்றுக்கொண்டேன். நடிகன் எனபதை விட ஆன்மீகவாதி என கூறிக்கொள்வதில் எனக்கு மிகுந்த பெருமை. ஆன்மீக புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் உண்டு. ஆண்டவன் வருவதற்கு மனதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.