சென்னை: செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன் என முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.

அதுபோல ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம். அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என கூறி உள்ளார்.

அதிமுக மூத்த  உறுப்பினர்களில் ஒருவரான செங்கோட்டையன்,   இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தபோது,  அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் வெளியேறியவர்களை 10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு  கெடு விதித்திருந்தார். இது அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன், மற்ற கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  பிரிந்து சென்ற அதிமுக தலைவர்கள் ஒன்றிணைந்தால் அதிமுக பலம்பெற்று விடும் மேலும், பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால், வரும் தேர்தல் திமுக கூட்டணிக்கு கடுமையான சவால்களை கொடுக்கும் என்பதால், பல கட்சிகள் அதிமுக சிதற வேண்டும் என்று ஆசைபடுகின்றனர்.

இந்த நிலையில்,  செங்கோட்டையன் அதிரடி பேட்டி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து செய்தியளார்களின் கேள்விக்கு பதில் கூறிய ஓபிஎஸ்,  அதிமுகவில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, அதிமுகவை வளர்க்க உதவியவர் செங்கோட்டையன். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் கழகம் ஒருங்கிணைக்க வேண்டும்; ‘ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்’ என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார்.

நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுகவின் சக்திகள் பிரிந்து இருப்பதால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டு பல்வேறு சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழல் நீடித்து வருகிறது; அந்த நிலை மாறவேண்டும் என்றால் அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும். அதிமுக தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தில் இருந்து எந்தவொரு தொண்டரையும் வெளியேற்ற முடியாது.

அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம். செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு கூறினார்.

அதிமுக தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்று வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். தஞ்சாவூரில் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்தால் மட்டுமே தமிழ்நாட்டில் மீண்டும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆட்சியை கொண்டுவர முடியும். இல்லையென்றால் முடியாது என்று தொண்டர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அப்படி தொண்டர்களின் எண்ணத்தை செங்கோட்டையன் இன்றைக்கு வெளிப்படுத்தியுள்ளார், அது வரவேற்கத்தக்கது. ஏனென்றால் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி இரண்டு பேரின் நல்ல மதிப்பை பெற்றவர் செங்கோட்டையன்.

கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சொன்னதை மனப்பூர்வமாக நான் வரவேற்கிறேன். ஒன்றிணைப்பு குழு என்பது குறித்து எனக்கு இன்றைக்கு தான் தெரிய வந்துள்ளது. எங்களிடம் செங்கோட்டையன் தொடர்பில் இல்லை. அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அவருடைய எண்ணம்போல் எல்லா தொண்டர்களும் விரும்புகிறார்கள் நிச்சயமாக எல்லோரும் அதை வரவேற்பார்கள். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை பத்து நாள்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என கெடு கொடுத்திருக்கிறார். அப்படி ஒருங்கிணைக்கப்படவில்லை என்றால் இணைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். பத்து நாள் கெடு முடிந்தவுடன் எனது கருத்தை நான் தெரிவிக்கிறேன். கட்சி சார்பு இல்லாத பொதுமக்கள் பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என நினைக்கிறார்கள். அதிமுக மீது தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு பாசம் வைத்திருக்கிறார்கள். அதை இணைப்பதற்கு தடையாக இருப்பவர்கள் மீது கோபமாகவும் இருக்கிறார்கள் என வைத்தியலிங்கம் கூறினார்.

எம்.ஜி.ஆர். ஆளுமையை மனதில் கொண்டு பிரிந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க வேண்டும் – எடப்பாடிக்கு10 நாட்கள் கெடு! செங்கோட்டையன்