புதுச்சேரி: “நாட்டு மக்கள் சிந்திப்பதற்காக கைது செய்யப்படுகிறார்கள். நாட்டில் பேச்சுரிமை நசுக்கப்பட்டு வருகிறது. இதை சொல்வதால், நானும் கைது செய்யப்படலாம்” என்று பேசியுள்ளார் ராகுல் காந்தி.

சுதந்திரமாக கருத்து தெரிவித்த காரணத்திற்காக, சூழலியல் செயல்பாட்டாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளதை இவ்வாறு குறிப்பிட்டார் ராகுல் காந்தி.

புதுச்சேரியில், ஒரு கல்லூரி நிகழ்வில் அவர் கலந்துகொண்டபோது கூறியதாவது, “மக்கள் சிந்தித்துப் பேசுவதற்காக கைது செய்யப்படுகிறார்கள். இதை சொல்வதால் நானும்கூட கைது செய்யப்படலாம். நீங்கள் இந்த நாட்டின் வாயை மூடி, அதன் மக்களை பேசமாலிருக்குமாறு மிரட்டும்போது, நாட்டின் அடையாளப் பண்பையே நீங்கள் அழிக்கிறீர்கள்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார் அவர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, ஒரு டூல்கிட்டை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டதற்காக, 22 வயதேயான சூழலியல் செயல்பாட்டாளர் திஷா ரவி, டெல்லி காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேசத் துரோகம், பகைமையை வளர்த்தல், குற்றச் சதி உள்ளிட்டப் பிரிவுகளில் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.