சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன் என டெல்லியில் இருந்து திரும்பி ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9வது நினைவு நாள் இன்று மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரது நினைவு நாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்த்நது, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அந்த சந்திப்பின்போது தமிழகத்தில் இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலையை அவரிடம் எடுத்துக் கூறினேன். அவர் தன்னுடைய அன்பான வார்த்தைகளைக் கூறி அனுப்பினார்.
அதிமுகவை எம்ஜிஆர் எந்த நோக்கத்தில் உருவாக்கினாரோ, ஜெயலலிதா அந்த இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக வழிநடத்தி நிலைநிறுத்தினாரோ அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம். அதுவே தமிழக மக்களின் கருத்தாகவும் இருக்கிறது என்பதை அமித்ஷாவிடம் தெரிவித்திருக்கிறேன்.
பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன். அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தினேன். நான் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் தனிக் கட்சியைத் தொடங்குவேன் என்று சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, நவ. 24 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் நடைபெற அதிமுக உரிமை மீட்புக் குழு கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதாகவும் முன்பு இருந்ததைப் போன்று அதிமுக ஒன்றிணைய வேண்டும், இல்லையென்றால் இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தில்லிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு பாஜக மூத்த தலைவர்களை சந்திக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் டிச. 2 இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து சுமார் 20 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனை ஓபிஎஸ் பின்னர் உறுதிப்படுத்தினார். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறிவரும் ஓபிஎஸ், வருகிற டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் என்ன முடிவை அறிவிக்கப்போகிறார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.