சென்னை:

தேமுதிக தலைவர் விஜயகாந்தை  நண்பகலில் சந்தித்து பேசிய திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாக கூறினார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழகத்திலும் திமுக, அதிமுக தலைமைகள் கூட்டணிக்காக மாற்று கட்சிகளுக்கு வலைவீசி வருகின்றன.

ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளான கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகள்  தொடர்ந்து வருகின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள்  அதிகாரப்பூர்வ மாக இணைந்துவிட்ட நிலையில், தமகா, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சிகளிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றது.

தேமுதிகவை தங்களுக்கு கூட்டணிக்கு இழுக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆனால், விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கேட்கும் தொகுதிகள் மற்றும் தேர்தல் செலவுகளை கேட்டதும் இரு கட்சிகளும் ஆ….வென வாயை பிளந்து வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு விநியோகம் செய்வதாக தேமுதிக அறிவித்தது. இது மேலும் அரசியல் சூட்டை கிளப்பிய நிலையில், இன்று காலை திடீரென ரஜினிகாந்த் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று சந்தித்து பேசினார். அதுகுறித்து விளக்கம் அளித்த ரஜினி, விஜயகாந்த் உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்ததாக கூறினார்.

இந்த சூடு ஆறாத நிலையில், இன்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சி முடிந்த வேகத்தில் சாலிக்கிராமத்தில் உள்ள  விஜயகாந்த் வீட்டுக்கு திடீரென வருகை தந்தித்தார்.  அங்கு விஜயகாந்தை சந்தித்து பேசிய அவர், அவரது மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் நிர்வாகிகளையும்  சந்தித்து பேசினார்.

இது மேலும் அரசியல் சூட்டை கிளப்ப,  சந்திப்பு முடிந்து கிளம்பிய ஸ்டாலினிடம் செய்தி யாளர்கள் கேள்விகளை எழுப்ப…  தான் வந்தது விஜயகாந்தின் உடல் குறித்து விசாரிக்கத்தான், அரசியல் பேசவில்லை  என்று கூலாக சொல்லிவிட்டு கிளம்பினார் ஸ்டாலின்.

ஆனால், இன்று காலை அதிமுக தேமுதிக இடையே மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக உறுதிப்படாத தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்தே ஸ்டாலின் விஜய காந்தை சந்தித்து பேசியதாகவும்,  தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக  திகழும் விஜயகாந்தை தங்களது கூட்டணியில்  இணைக்கும் முயற்சியில்தான் ஸ்டாலின் விஜயகாந்தை இன்று திடீரென சந்தித்து பேசியதாக விமர்சிக்கப்படுகிறது.