சென்னை: அதிமுக ஒருங்கிணைப்புக்கு நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை என செங்கோட்டையன் பல்டி அடித்துள்ளார். இதையடுத்து அவர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

அதிமுகவில் மூத்த தலைவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில், எடப்பாடி எதிரான மனநிலையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். வெளியே சென்றவர்களை இணைக்க வேண்டும். யாரை இணைக்க வேண்டும் என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பியது.
இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பைத் தவிர மற்ற அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கி உத்தரவிட்டார். மேலும், செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளையும் பறித்தார். இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், நேற்று மாலை கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் அவரது கெடு குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறியவர், “விரைவில் நல்லது நடக்கும் என்றவர், அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து, பத்து நாட்கள் கெடு என்று நான் சொல்லவில்லை.. மீடியாக்கள் எனது பேச்சை தவறாகப் புரிந்துகொண்டார்கள். பத்து நாட்களுக்குள் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதம் ஒன்றரை மாதம் எடுத்துக் கொள்ளலாம் என்று தான் சொல்லியிருந்தேன்” எனத் தெரிவித்தார்.
செங்கோட்டையனின் திடீர் பல்டி சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.