சென்னை,
விவசாயிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் கமல் பேசும்போது, நான் ஓட்டு கேட்க வரவில்லை; சோறு சேகரிக்க வந்துள்ளேன் என்று பேசினார்.
அவரது பேச்சு தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை உருவாக்கி வருகிறது.
கடந்த சில மாதங்களாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து டுவிட்டர் மூலம் விமர்சித்து வரும் கமல் விரைவில் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் எண்ணூர் கழிமுகம் குறித்து எச்சரிக்கை விடுத்தும், பின்னர் நேரடியாக அந்த பகுதிக்கு சென்றும் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து விழித்துக்கொண்ட தமிழக அரசு, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டத்தில் கமல் பங்கேற்றார்.
சென்னை அடையாறு பாலம் அருகே உள்ள முத்தமிழ் அரங்கத்தில், விவசாயிகளின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கமல் கூட்டத்துக்கு வருவாரா, வரமாட்டாரா என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் இருந்தபோது, பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல், பளீர் வெள்ளை உடையில் வந்து கலந்துகொண்டார்.
தொடர்ந்து கூட்டத்தி கமல் சிறப்பு ஆற்றினார். அப்போது விவசாயிகள் நிலைமையை பற்றிய பேசிய கமல், சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறினார்.
“மற்ற மாநிலங்களில் விவசாயக் கடன்களை ரத்து செய்யும் அரசு தமிழகத்திற்கு ஏன் அதை மறுக்கிறது. அரசியல்வாதிகள் என்பவர்கள் தனியாக இல்லை நம்மோடுதான் இருக்கிறார்கள். தலைவனை தேடக் கூடாது, நியமிக்க வேண்டும்.
ஜனநாயகத்தில், மக்கள்தான் எஜமானர்களாக இருக்கிறார்கள். வைரத்தையும், தங்கத்தையும் பொடி செய்து சாப்பிட முடியாது. ஹைட்ரோ கார்பனை நாம் சாப்பிட முடியாது. சினிமா இல்லாமல் இருந்துவிட முடியும், உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் இருக்க முடியாது…” என்றார்.
“நாம் கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு இருந்து விட்டோம். இப்போது விழித்துக் கொள்ள வேண்டும். வேளாண் துறையை தொழில் துறையாக்கினால்தான் அனைவரும் வாழ முடியும்” “பல ஆண்டுகளாக விவசாயிகளின் தொல்லைகளையும், பெருமைகளையும் கேட்டு வளர்ந்தவன். என்னால் முடிந்த அளவுக்கு உதவி செய்வேன். அது இதுவரை நான் சாப்பிட்ட சோறுக்கு நன்றி செலுத்துவது போல்!” என்றார்.
இந்து மதம் என்பது, இயற்கையை வழிபடும் முறையைக் கொண்டது. இயற்கையே இறைவன் என்ற தன்மையைக் கொண்டதால்தான், இங்கே ஆறு, ஏரி, மரம் என இயற்கையை வழிபட்டனர். அந்த வகையில், தானும் இந்து மதக் கருத்துகளைக் கொண்டவன் தான் என்பதை வலியுறுத்தும் விதமாக, “மழைகளையும், ஆறுகளையும் சாமியாக கும்பிடுங்கள்.” என்றார்.
அந்த வகையில், இயற்கையை பராமரிக்கும் பணியில், அதாவது, குளங்கள், ஏரிகளை பராமரிப்பு செய்யும் பணியில் நிச்சயம் நாங்கள் உதவுவோம். கடந்த 50 ஆண்டுகளாக நாம் தூங்கி விட்டோம். இனியாவது விழித்துக் கொள்வோம். புராண காலங்களில் பாலம் கட்ட அணில் உதவியது போல் விவசாயிகளுக்கு உதவிட நானும் ஒரு ஜந்துவாக இருப்பேன்..” என்று கூறினார்.
இதை எல்லாம் விட ஹைலைட்டான விஷயம், இன்னும் 3 நாட்களில் ஒரு பகீர் விஷயத்தை வெளிப்படுத்துவேன். ஒரு ஆற்றையே காணவில்லை. அதை சொல்கிறேன்.. பொறுத்திருங்கள் என்று கூறினார்.
அவரது பேச்சு விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.