7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை: ராகுல்காந்தி

Must read

சென்னை:

செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, ராஜீவ் கொலையாளிகள் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது என்று கூறினார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை இன்று மாலை தொடங்க உள்ள ராகுல்காந்தி, முன்னதாக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது, ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் 7 பேர் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  அதற்கு பதில் தெரிவித்த ராகுல்,  எனது தந்தை ராஜிவ் காந்தி கொலை என்பது எனது தனிப்பட்ட பிரச்சினையா? என்றவர்,  ராஜீவ் காந்தி கொலை வழக்கு சட்டப் பிரச்சினை தொடர்பானது. நீதி மன்றம்தான், அவர்கள் விடுதலை பற்றி முடிவெடுக்க வேண்டும். சிறையில் இருக்கும் 7 பேர் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை என்று கூறினார்.

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு,  பிரதமர் வேட்பாளர் யார் என்று கேட்பது ஆணவம். நரேந்திர மோடி அரசை முடிவுக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம். எதிர்க்கட்சிகள் வலிமையாக இணைந்து உள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை தமிழர்கள் படுகொலை குறித்து கூறிய ராகுல், இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் கருதவில்லை. தமிழக மக்கள் மீது காங்கிரஸ் மிகுந்த அன்பு கொண்டுள்ளது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய ராகுல்,  காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் ‘ தள்ளுபடி செய்யப்படும். நாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டியவர், நலனுக்காக பிரத்யேகமாக அமைச்சரவை தொடங்குவோம் என்றும் தெரிவித்தார்.

More articles

Latest article