கீவ்: நேட்டோ உக்ரைனை சேர்ப்பதில் ஆர்வம் காட்டவில்லை, அதனால் நேட்டோவுடன் இணைய விருப்பம் இல்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ அமைப்பில் சேர்த்துக்கொள்ளும்படி இனி வற்புறுத்த மாட்டோம் என்று கூறியதுடன், எங்கள் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டோம். இறுதி வரை நாங்கள் போராடுவோம் என்றும் கூறியுள்ளார்.
நேட்டோ அமைப்பில் சேர உக்ரைன் விரும்பியதாலேயே, அந்நாடு மீது ரஷ்யா தனது நாட்டு பாதுகாப்பு கருதி போர் தொடுத்துள்ளது. பிப்ரவரி 24ந்தேதி தொடங்கிய போர் இன்றும் தொடர்கிறது. பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படையினர், தலைநகர் கீவ் உள்பட முக்கிய நகரங்களை கைப்பற்ற போரிட்டு வருகின்றனர். இந்த போரில் இரு தரப்பினருக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்து பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காண வேண்டும் என இந்தியா உள்பட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதற்கு செவி சாய்க்காமல் இரு நாடுகளும் தொடர்ந்து போரிட்டு வருகிறது. உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, வெளிநாட்டினர் வெளியேறும் வகையில் ரஷ்யா நேற்று முக்கிய நகரங்களில் மட்டும் போர் நிறுத்தம் அறிவித்தது.
இந்த நிலையில் ஏபிசி நியூஸ் எனப்படும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோ அமைப்பில் சேர பலமுறை வேண்டுகோள் விடுத்தேன். அவர்களை முழுமையாக குளிர்த்து விட்டேன். ஆனால், அவர்கள் உக்ரைனை நேட்டோவில் இணைத்துக் கொள்ள ஏற்கனவே அந்த அமைப்பில் உள்ள நாடுகள் முனைப்பு காட்டவில்லை. இதனால் தனது மனநிலை மாறிவிட்டது என்று கூறியுள்ளார்.
மேலும, ரஷ்யாவுடனான போர் காரணமாக, உக்ரைனை தங்களது அமைப்பில் இணைத்து கொள்வதற்கு நேட்டோ அஞ்சுகிறது. அதனால், இனிமேல், உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்த்துக்கொள்ளும்படி வற்புறுத்த மாட்டோம் என்று கூறியதுடன் யார் காலில் விழுந்து கெஞ்சி பெரும் நாடாக உக்ரைன் இருக்காது என்று தெரிவித்ததுடன், நடைபெற்று வரும் போரில் உக்ரைன் மக்கள் ரஷ்யாவிடம் சரணடையவும் தயாராக இல்லை என்பதை உறுதியுடன் தெரிவித்தவர், எங்கள் மண்ணை விட்டுக் கொடுக்க மாட்டோம். இறுதி வரை நாங்கள் போராடுவோம்”, என்று கூறினார்.
அத்துடன், ரஷ்யாவால் சுதந்திர பகுதிகளாக அங்கீகரிக்கப்பட்ட கிரீமியா, டான்பாசின் உள்ள மக்கள் எப்படி வாழப் போகிறார்கள், அவர்களின் எதிர்காலம் தொடர்பாக ரஷ்யா அதிபர் புடினுடன் விவாதிக்க தயார் என்றும் தெரிவித்துள்ளார்.