ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் கல்லம் மில் கடந்த மார்ச் மாதம் பதிவிட்ட ‘இந்தியப் பெண் பாகிஸ்தானை முற்றிலும் நேசிக்கிறார்’ (Indian Girl Absolutely loving Pakistan) என்ற வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இடம்பெற்றிருந்தார்.

AK-47 துப்பாக்கி ஏந்திய 6 பாதுகாவலர்களுடன் பாகிஸ்தானின் லாஹூரில் உள்ள அனார்கலி பஜாரில் அவர் வலம்வரும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்த நிலையில் ஒரு சாதாரண யூடியூபருக்கு ஏன் இவ்வளவு AK-47 துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு இருந்தது? என்று சமூக வலைத்தளம் பரபரத்தது.
இதுகுறித்து அந்த வீடியோவை பதிவிட்ட இங்கிலாந்தின் கிளாஸ்கோ பகுதியில் உள்ள கோட்பிரிட்ஜைச் சேர்ந்த கல்லம் மில் தனது எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார்.
அதில், “பாகிஸ்தான் செல்லும் எந்தவொரு சுற்றுலா பயணிக்கும் “முழு நெறிமுறை” வேண்டுமா ? என்று சுற்றுலா ஏற்பாட்டாளர்களால் கேட்கப்படும்.
ஆயுதமேந்திய காவலர்கள், பின்னால் பின்தொடரும் கார் போன்றவை இந்த முழு நெறிமுறையில் இடம்பெறும், நான் இதுவரை பாகிஸ்தானுக்கு ஏழு முறை பயணித்திருக்கிறேன் என்னிடம் இதுபோல் கேட்கப்பட்டுள்ளது ஆனால் நான் அதை மறுத்திருக்கிறேன்.
ஆனால், நான் இம்முறை பாகிஸ்தான் சென்றபோது வழக்கத்துக்கு மாறாக பட்டப்பகலில் மார்க்கெட் பகுதியில் ஒருவர் முழு நெறிமுறையுடன் சுற்றிவந்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது என்று ஜோதி மல்ஹோத்ரா குறித்து குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தற்போது இந்திய ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து பலர் என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர், “நான் அவர்களிடம் சிக்கிக்கொள்வது போல் உணர்கிறேன்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் நர்சிங் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு போர் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் நாடுகளான, சிரியா, வட கொரியா, பிரேசில், கெய்ரோ, ரஷ்யா, உக்ரைன், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயணிப்பதை 2020ம் ஆண்டு கொரோனா காலத்தில் பொழுதுபோக்காக துவங்கியுள்ளார் கல்லம் மில்.
தற்போது அதையே தனது முழுநேர தொழிலாக மேற்கொண்டு வரும் கல்லம் மில் தனது பயண அனுபவங்களை கல்லம் அப்ராட் (@CallumAbroad) என்ற யூடியூப் சேனலில் பதிவிடுவதுடன் இங்கிலாந்து ஊடகங்களுக்கும் அவ்வப்போது பேட்டி கொடுத்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.