சென்னை:

ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்பது  தமிழக மக்களின் ஆசை… அவர்களின்  எண்ண ஓட்டத்தையே தான் பிரதிபலித்தேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சென்னையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் திருவுருவ சிலை கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 16ந்தேதி அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தின ராக சோனியாகாந்தி கலந்துகொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். விழாவில் ராகுல் காந்தி உள்பட நாடு முழுவதும் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பாஜகவுக்கு எதிராக திரண்ட இந்த எதிர்க்கட்சி தலைவர்கள்  கூட்டத்தில் பேசிய திமுக தலைவர், ராகுல்காந்திதான் அந்த பிரதமர் வேட்பாளர் என்று முதன்முதலாக அறிவித்தார்.  ஸ்டாலினின் அறிவிப்பு ஒருபுறம் வரவேற்பு இருந்த நிலையில், மற்றொரு புறமும் அதிருப்தி கருத்துக்களும் வெளியாயின.  நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த பிறகு, பிரதமர் யார் என்பது முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்களின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் குறித்து யாரும் எந்த கருத்தையும் கூறவில்லை. இதை பாஜக தலைவர்கள் விமர்சித்து வந்தனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசையும்,  சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் வேட்பாள ராக ராகுலின் பெயரை முன் மொழிந்த ஸ்டாலின், அதனை கொல்கத்தா மாநாட்டில் ஏன் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், இன்று சென்னையில் நடைபெற்ற  திருமண விழாவில் கலந்துகொண்ட  திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது,

நாங்கள் சென்னைக்கு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று தமிழக மக்களின் ஆசையையே தான் தெரிவித்தேன் என்றும், அடுத்த பிரதமராக ராகுல் காந்தி இருக்கிறார் என்று நாங்கள் கூறவில்லை என்றவர்,  ராகுல்காந்தி பிரதமர் ஆக வேண்டும்  என்பது  தமிழக மக்களின் ஆசை… அவர்களின்  எண்ண ஓட்டத்தையே தான் பிரதிபலித்தேன்.. அதனால்தான் ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தேன் என்று கூறினார்.

ஆனால்,  ஒவ்வொரு மாநிலத்திலும் சூழல் வேறுபடுகிறது.. எனவேதா. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதுகுறித்து முடிவு செய்யலாம் என்று நினைக்கிறார்கள்…  ‘அதனால்தான்,கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர்  குறித்து பேசவில்லை, இதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.