சென்னை: தமிழ்நாட்டுக்கான நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினேன் என உள்துறைஅமைச்ர் அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் திடீரென டெல்லி சென்றது பேசும்பொருளாக மாறியது. இதன் காரணமாக அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக ஊடகங்களில் விவாதங்கள் நடைபெற்றன. இதற்கிடையில், எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 2மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இன்று காலை சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழி கொள்கை விவகாரம் குறித்தும் பேசியதாகவும், அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், மக்களின் பிரச்சனையை பேசதான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தோம் என்றவர், தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பை தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தியதாகவும், கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட மத்திய அரசு துணைநிற்க கூடாது என்றும் வலியுறுத்தியதுடன்,
கூட்டணி குறித்து எதுவும் பேசப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தல் நெருங்கும்போதுதான் கூட்டணி பேச்சு நடக்கும். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை என்று கூறியதுடன் மக்கள் பிரச்னைகளுக்காக மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது என்றார்.
டாஸ்மாக் ஊழல், போதைப் பொருள் விற்பனை என மிகவும் மோசமான நிலைக்கு தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது, டாஸ்மாக் ஊழல் குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அதனால் மத்திய அரசு தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம் என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் கூட்டணி தொடர்பாக சில கோரிக்கைகளை வைத்ததாகவும் தகவல்கள் உலா வருகின்றன. அதன்படி, 2026 தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு தொடர்பான முடிவை அ.தி.மு.க.தான் எடுக்கும் என்று கூறியதுடன், தேசிய ஜனநாயக கூட்டணியில், ஓ.பி.எஸ். டி.டி.வி., சசிகலா இடம் பெறக்கூடாது என்று கண்டிப்ப துடன் தெரிவித்ததுடன், தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தலைவர் பொறுப்பில் இருந்து விலக்க வேண்டும் என்று கோரிக்கை களை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.