மும்பை

காராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கிண்டல் செய்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருந்த போதிலும்  பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.   பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனா கட்சியுடன் முதல்வர் பதவி பகிர்வு குறித்த சர்ச்சையால் பாஜகவுடனான கூட்டணியை  சிவசேனா முறித்துக் கொண்டது.

தற்போது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.

இது குறித்து மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்நாவிஸ் ”இந்த சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஆறு மாதங்கள் கூட தாங்காது. நான் விரைவில் மீண்டும் வருவேன்.” எனத் தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், “எனக்கு சில வருடங்களாகவே தேவேந்திர ஃபட்நாவிஸை நன்கு தெரியும்.  ஆனால் அவர் ஜோதிடம் பயின்ற மாணவர் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது.   அவர் ஜோதிடம் பயின்றவரா?

அவர் அடிக்கடி நான் மீண்டும் வருவேன்,  நான் மீண்டும் வருவேன், என அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறார்.  அவர் இவ்வாறு சொல்லும் போதெல்லாம் நான் வேறு ஏதாவதாக இருக்கும் என நினைத்துக் கொள்கிறேன்.  செய்தியாளர்களான நீங்கள் தான் அவர் எந்த அர்த்தத்தில் இவ்வாறு கூறுகிறார் எனத் தெளிவு படுத்த வேண்டும்” எனக் கிண்டல் செய்துள்ளார்.