திருவனந்தபுரம்

பரிமலை குறித்த தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பு தெளிவாக இல்லாததால் 2018 ஆம் வருடத் தீர்ப்பைத் தொடர உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம் எனக் கடந்த வருடம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.   அதையொட்டி கடும் போராட்டம் நிகழ்ந்தது.  பல இந்து அமைப்புக்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுக்கள் அளித்தன.   அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றத்தின்5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.

அமர்வில் இடம் பெற்றிருந்த 5 நீதிபதிகளில் மூவர்  இளம் பெண்களை அனுமதிக்கக் கூடாது எனவும் இருவர் அனுமதிக்கலாம் எனவும் முடிவு தெரிவித்ததால் இந்த வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது.    அதே வேளையில் மத நம்பிக்கைகளில் யாரும் தலையிட உரிமை இல்லை எனவும் தீர்ப்பில் கூறப்பட்டது.

இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு தெளிவாக இல்லை என கேரள அரசு கருதுகிறது.   எனவே இது குறித்து தெளிவு படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தைக் கேரள அரசு கேட்டுக்கொள்கிறது.  எனவே இது குறித்த முழுமையான விளக்கங்கள் கிடைக்கும் வரை 2018 ஆம் வருடத் தீர்ப்பை அரசு தொடர உள்ளது.  அதன் பிறகு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

உச்சநீதிமன்றம் அறிவிக்க உள்ள 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு சபரிமலை விவகாரத்தில் உள்ள பாலின பாகுபாடுகளின் சட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்துமா? அல்லது முழு வழக்கு விசாரணையையும் மீண்டும் நடத்துமா?  இது போன்ற விவரங்கள் குறித்தும் விளக்கம் தேவைப்படுகிறது.  மேலும் 2018 ஆம் வருடம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை செல்ல அனுமதித்த தீர்ப்பை தற்போது ரத்து செய்யாததால் அந்த தீர்ப்பு செல்லும் எனப் பொருளாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.