சென்னை:
இந்து கோயில்களை இடிக்க வேண்டும் என்று தான் சொல்லவில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும்” என்று பேசியதாக தகவல் பரவியது. இது குறித்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.
இந்த நிலையில், திருமாவளவன், தான் அப்படி பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது:
“டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் நினைவு தினம். மற்றும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம். இத்தினத்தை ஒவ்வாரு ஆண்டும், “தலித் மற்றும் இஸ்லாமியர் எழுச்சி நாள்” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கடைபிடித்து வருகிறது. இதையொட்டி பொதுக்கூட்டமும் நடத்துவோம்.
அதன்படி நேற்ற வட சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தினோம். அப்போது பேசிய நான், “நானூறு ஆண்டுகளுக்கு முன் ராமர் கோயிலை இடித்து மசூதி கட்டியதாக கூறுகிறார்கள். ஒரு வாதத்துக்காக சொல்கிறேன்.. குதர்க்கமாகவே சொல்கிறேன்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான சிவன் கோயில்களிலும் பெருமாள் கோயில்களும் புத்த விகார் மற்றும் சமண கோயில்கள் இருந்த இடத்தல்தான் கட்டப்பட்டிருக்கின்றன. இது வரலாறு. ஆய்வுகளில் இருந்து தெரியவந்த உண்மை.
திருப்பதி ஏழு மலையான் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் காஞ்சி காமாட்சி கோயில் ஆகியவையும் புத்தவிகார் இருந்த இடத்தில்தான் கட்டப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் அவற்றையும் இடித்து புத்த விகார் கட்டலாமா என்றுதான் கேட்டேன்.
இதைச் சொல்லும் முன்பே, ஒரு வாதத்துக்காக சொல்கிறேன்.. குதர்க்கமாகவே சொல்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் சொன்னேன்.
மற்றடி பொத்தாம் பொதுவாக இந்துக்கோயில்களை இடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
நான் பேசியதில் முன்னும் பின்னும் வெட்டிவிட்டு தவறான அர்த்தம் கொடுக்கும்படியாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது” என்று திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.