சென்னை: எனது மகன் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை, அது அவரது விருப்பம் என்று தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இதுகுறித்து வரும் 20ஆம் தேதி நடைபெறும் கட்சியின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என கூறினார். ஆனால், துரை வையாபுரி, மதிமுக வேட்பாளர்களுக்காக அரசியல் களத்தில் புகுந்து ஆதரவு திரட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அருகே உள்ள கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவைகோ, உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியான திமுக வெற்றி பெறும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது, எனது மகன் அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பம் கிடையாது. நான் 56 வருடங்கள் அரசியலில் கஷ்டப்பட்டு உள்ளேன். 5 வருடங்கள் சிறை உள்பட 28 வருடங்கள் லட்சக்கணக்கான கிலோமீட்டர்கள் காரில் பயணம், ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நடைபயணம், நூற்றுக்கணக்கான போராட்டங்கள் என எனது வாழ்க்கையை நான் அழித்து கொண்டேன். அதுபோல எனது மகனும் கஷ்டப்பட வேண்டாம், அவர் அரசியலுக்கு வருவதை நான் விரும்பவில்லை என ஓப்பனா ககூறினார்.
மதிமுகவினர், உங்கள் மகனை கட்சிக்குள் கொண்டுவர ஆர்வம் காட்டுகிறார்களே என்ற கேள்விக்கு, இதுதொடர்பாக வரும் 20ந்தேதி நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரியவரும் என கூறினார்.
வைகோவின் மகன் துரை வையாபுரி. தற்போது49 வயதாகும் துரை வையாபுரி எம்பிஏ பட்டதாரி. அவர் முன்பு ஐடிசி புகையிலை பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியின் பெரும் ஏஜண்டாக இருந்தவர். ஆனால், அவரது தந்தை வைகோவோ, புகையிலை மதுவுக்கு எதிரானவர். அதனால் துரை வையாபுரியின் தொழில் மீதான விமர்சனங்களும் எழுந்தன. பின்னர் , அவர் அத்தொழில் இருந்து விலகி விட்டு, கட்டுமானத் தொழிலில் இறங்கி உள்ளார். தற்போது சென்னையில் கட்டுமான நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
துரை வையாபுரி, கடந்த 15ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த லஞ்ச லாவண்யம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். காட்டமாக கருத்து தெரிவித்திருந்தார். நக்சலைட்டாக மாறிவிடலாம் போல தொன்றுகிறது என்று கூறிய அவரது கருத்து பரபரப்பாக பேசப் பட்டது. ஏனென்றால், அப்போது கருணாநிதி தலையிலான திமுக ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த காலக்கட்டத்தில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு கையூட்டு கேட்டு அதிகாரிகளின் நெருக்கடி கொடுத்ததாகவும், அதனால்தான், அவர் கொந்தளித்ததாகவும் கூறப்பட்டது. பின்னர், அந்த விவகாரம் ஆறிப்போனது.
அதைத் தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், இதுவரை அவர் நேரடியாக களத்திற்குள் புகவில்லை. ஆனால், அவருக்கு அரசியல் ஆசை இருப்பதை சில நிகழ்வுகள் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில், விருதுநகர் மாவட்டத்தில் மதிமுக சார்பில் நடத்தப்பட்ட திராவிட பயிற்சிப் பாசறையில் வைகோ மகன் துரை வையாபுரி கலந்துகொண்டு பேசினார். அப்போது, “எந்த தனிப்பட்ட மொழிக்கும், திராவிடம் எதிரானது கிடையாது. நுனிப்புல் மேய்ந்து, திராவிடம் பற்றி விளக்கம் அளிப்பவர்கள் மக்களை குழப்பி வருகின்றனர். திராவிடம் என்பது மொழி ஆதிக்கத்திற்கு மட்டுமே எதிரானது என கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில், திமுக உள்பட பல கட்சிகள் திராவிடம் குறித்து பேசி வரும் நிலையில், துரைவையாபுரியின் திராவிடம் குறித்த விளக்கம் திமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இருந்து கொண்டே, திமுகவுக்கு எதிராக துரை வையாபுரி பேசி இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும், மதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்காக சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலிலும் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அப்போது, பிடிக்காமல் காலச்சூழலில் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், ஆனால், அரசியலையும் சிறப்பாக செய்யவேண்டும் என நினைக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதனால் அவரை அரசியலுக்குள் இழுக்க மதிமுக தலைவர்கள் விரும்புகின்றனர். இது வருவது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஊடகங்களும் இதுகுறித்து பலவேறு தகவல்கள் வெளியிட்டு வருகின்றன. துரை வையாபுரி அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை மதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.
ஆனால், வைகோவோ மகன் அரசியலுக்கு வரவில்லை என்று ஓப்பனாக தெரிவித்து உள்ளார். ஆனால் துரை வையாபுரியின் நிலைப்பாடு என்ன என்பது இதுவரை உறுதி செய்யப்பட்டவில்லை.
தாம் பட்டதேபோதும், எதற்கு மகனும் வந்து கஷ்டப்படவேண்டும் என்று வைகோ நினைக்கிறாரோ… என்னவோ….?