‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்துக்குப் பரிசுத்தொகை கிடையாது என்று கவிஞர் சிநேகன் தெரிவித்து உள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 100 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுதி வழங்கி, அவ்வப்போது அரசியல் குறித்து பேசியும் பரபரப்பை கூட்டி வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகர் சினேகன் முதல் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஆரவ் முதலிடத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகையும் கொடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது இடத்தை பிடித்த சினேகனுக்கு எந்தவித பரிசும் கொடுக்கப்படாமல் தனித்து நிர்கதியாக விடப்பட்டார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனியார் வானொலி ஒன்றில் பேசிய சினேகன், இரண்டாவது இடம் பிடித்த தனக்கு எவ்வித பரிசுத்தொகையும் வழங்கப்படவில்லை என்று சோகத்துடன் கூறினார்.
மேலும் அவர் பேசும்போது, நூறு நாள் என்பது முதல் வெற்றி. முதல் இடம் என்பது முழு வெற்றி. முழு வெற்றியடைந்து பணம் வந்தது என்றால் அது மக்கள் கொடுத்த பணம். ஆனால் என்னால் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை. மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்று கூறப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டு என் கிராமத்துக்குப் பக்கத்தில் ஓர் இடம் வாங்கி வைத்துள்ளேன். அதில்,. என் அம்மா மற்றும் அப்பா பெயரில் நூலகம் அமையவேண்டும் என்பது எனது வெகுநாளைய ஆசை.
அந்த இடத்தில் என்னைப் போன்ற பல லட்சம் கிராம இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்பதற்காக நூலகம் கட்ட விரும்பினேன். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பணத்தில் நூலகம் கட்டிவிடலாம் என்று யோசித்து வைத்தேன்.
போட்டியில் நான் வெற்றி பெற்றிருந்தால், மேடையில் அதை அறிவிக்க இருந்தேன். கமல் சாரை எப்போது அந்நூலக விழாவுக்கு அழைக்கவேண்டும் என்கிற தேதி வரைக்கும் முடிவு செய்து வைத்திருந்தேன். கு. ஞானசம்பந்தன் தலைமையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் குழுவையும் யோசித்து வைத்திருந்தேன்.
அந்த நூலகத்தை வரும் தை மாதம் எந்தத் தேதியில் றக்கவேண்டும் என்பதும் அந்த யோசனை யில் இருந்தது.
ஆனால், எனது பெயர் இரண்டாவது இடத்துக்கே தேர்வானது. அதன் காரணமாக எனக்கு இதுவரை எந்த தொகையும் வழங்கப்படவில்லை. வழங்குவதாகவும் சொல்லவில்லை.
நான் கையொப்பட்டமிட்ட ஒப்பந்தத்திலேயே அப்படித்தான் உள்ளது. அதனால் அதை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்று கூறினார்.
மேலும், இரண்டாவது இடத்துக்குத் தொகை கொடுக்கவில்லை என்பதில் எனக்கு எந்த வருத்த மும் இல்லை. நூலகத்தின் கனவு கொஞ்சம் தள்ளிப்போயிருக்கிறதே தவிர தவிர்க்கப்பட வில்லை என்று கூறினார்.
ஒருவேளை போட்டியில் நான் ஜெயித்திருந்தால் அந்தக் காசைத் தொடவே கூடாது என நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கனவு பலிக்கவில்லை. அதற்குக் காரணம் எனக்குத் தெரியாது.
மக்களுடைய தீர்ப்பு என்றார்கள். அதை ஏற்றுக்கொண்டுள்ளேன்.
இவ்வாறு சினேகன் பேசியுள்ளார்.
வெற்றி பெற்ற ஆரவ்க்கு ரூ. 50 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.