டெல்லி: நாட்டில் நிலவும் வேலையின்மையை போக்கும் அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் சோலார் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி, விளை பொருட்களை கொண்டு செய்வதற்காக தனி விமானம் இயக்கப்படும் என்று அறிவித்தார்.

விவசாயிகளுக்கு கடன் வழங்க 15 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய இலக்கு, விவசாயத்துறைக்கு பட்ஜெட்டில் 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ரூ.99,300 கோடி ஒதுக்கீடு -ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைப்பு என அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: நாட்டில் இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்னை வேலை வாய்ப்பின்மை.

ஆனால் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உதவும் எந்த திட்டங்களும், யோசனையையும் நான் பட்ஜெட்டில் பார்க்க வில்லை. அரசாங்கத்தின் மனநிலையை பற்றித் தான் விரிவாக கூறுகிறது. ஆனால் எதுவும் நடக்காது.

இது வரலாற்றில் மிக நீளமான பட்ஜெட் உரையாக இருக்கலாம், ஆனால் வேறு ஒன்றும் இல்லை. இது வெற்று பட்ஜெட்டாக காட்சியளிக்கிறது என்று கூறியிருக்கிறார்.

முன்னதாக, என்பிஆர் நடைமுறையை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் வேலை வாய்ப்பின்மை பதிவேடு என்ற போராட்டத்தை ராஜஸ்தானில் தொடங்கியது நினைவிருக்கலாம்.