சென்னை: “நான் எங்கும் ஓடி ஒளியவில்லை”! என அரசு பள்ளியில் ஆன்மிகம் குறித்து உரையாற்றிய குருஜி மகாவிஷ்ணு வீடியோ வெளியிட்டு உள்ளார். மேலும் இன்று மதியம் சென்னை திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் ஆன்மிகம் பேசியது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆன்மிகம் குறித்து பேசிய ரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் குருஜி மகாவிஷ்ணு என்பவரை கைது செய்ய வேண்டும் என பல தரப்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை கைது செய்ய தேடி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன,.
இந்த நிலையில், பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் என்ன தவறாக பேசிவிட்டேன். நான் எங்கும் ஒடி ஒளியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆசிரியர் தினத்தன்று மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்கப்பட்டது. இதற்காக பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களிடையே சிறப்புரை ஆற்ற அரசு பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். இங்கு உரையாற்றிய மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்று கர்மா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைக்கேட்ட அந்த பள்ளியில் பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளியான தமிழ் ஆசிரியர் சங்கர் என்பவருக்கும், மகாவிஷ்ணுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, ஒரு தரப்பினர், அரசு பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சு என்ற பெயரில் ஆன்மிக சொற்பொழிவாற்றியது தவறு என்று விமர்சிக்கப்பட்டது. மேலும் பலர், போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக வரும் மாணவர்களை திருத்த ஆன்மிகமே சிறந்தது என்றும் கூறி வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியது.
இதுதொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இச்சம்பவம் கண்டனத்துக்குரியது எனவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்ப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மாற்று திறநாளிகள் சங்கம் மகாவிஷ்ணு மீது புகார் கொடுத்தது. இதையடுத்து, மகாவிஷ்ணுவை கைது செய்ய தமிழ்நாடு காவல்துறை விரைந்து செயலாற்றி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகம் சென்று அதன் நிறுவனர் மகாவிஷ்ணு குறித்த விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மதுரையை பூர்வீகமாக கொண்ட மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளைக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் இருப்பதும், தமிழ்நாட்டில் அவிநாசி குளத்துப்பாளையம் பகுதியில் தலைமை அலுவலகம் இருப்பதும் தெரியவந்தது. அவர் தற்போது வெளிநாடு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டது. மகாவிஷ்ணு தற்போது சிட்னியில் பயிற்சி வகுப்பு எடுக்க சென்றுள்ளதாக போலீஸ் விசாரணையின்போது தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அவிநாசியில் உள்ள அறக்கட்டளை அலுவலகத்தில் இருந்து உணவு தயாரித்து தினந்தோறும் அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு நபர்களுக்கு உணவு விநியோகித்து வருகின்றனர். மகாவிஷ்ணுவுக்கான பின்புலம், வருமானம், இவரது யூ டியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோ பதிவுகள், ஏற்கனவே எங்கெங்கு உரையாற்றி உள்ளார்? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில்,பள்ளியில் சர்ச்சையாக பேசிய விவகாரத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்ணு வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக மகாவிஷ்ணு வெளியிட்டுள்ள வீடியோவில், ““நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. என்னைப் பற்றி தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது. அதில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட ஆறு நாட்கள் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அங்குத் தொடர்ச்சியாக யோகா பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அசோக் நகர் பள்ளியில் காலையிலும், மதியம் சைதாப்பேட்டை பள்ளியில் மதியமும் நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள் நான் ஆஸ்திரேலியா கிளம்பி வந்து விட்டேன்.
நான் எதற்காக ஓடி ஒளிய வேண்டும். ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். இதை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார்களா அல்லது பதிவு செய்யப் போகிறார்களா என்று தெரியவில்லை. மேலும் பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திலும் திருப்பூரில் உள்ள எனது இல்லத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அவர்களது வேலையை காவல்துறையினர் சரியாகச் செய்கிறார்கள். அதில் எந்த தவறும் கிடையாது.
எனது விளக்கத்தை அளிக்கக் கடமை இருக்கிறது. எனவே நாளை அதாவது ஏழாம் தேதி மதியம் 1.10 மணிக்குச் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறேன். காவல்துறையினர் மீதும் இந்தியச் சட்டங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை உடையவன் நான். அதன் அடிப்படையிலும் தார்மீக அடிப்படையிலும் காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கையின் அடிப்படையிலும் நேரில் சென்று விளக்கம் அளிப்பேன். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதையும் பார்க்க முடிந்தது. அவரது கோபத்தையும் சீற்றத்தையும் மிகத் தெளிவாகக் காண முடிகிறது. அவருக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு தெளிவு இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதனால் எனக்குத் தெரிந்த விஷயங்களைச் சென்னையில் நான் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். என்னைக் குறித்து ஒரு புகார் வந்திருக்கிறது. அது தொடர்பாக விளக்கம் அளிக்கத் தமிழகத்தில் இருக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.