ஜூன் 27-ம் தேதி மாலை 4 மணியளவில் பீட்டர் பால் என்பவருடன் வனிதா விஜயகுமாருக்குத் திருமணம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

”அனைவருக்கும் காதலில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என்னுடைய வாழ்வில் இத்தனை கசப்பான அனுபவங்களுக்குப் பின்னரும் என் ஆழ்மனதில் திருமணத்தைப் பற்றிய உள்ளுணர்வை நான் நம்பினேன். இரண்டு பேர் ஒருவரை ஒருவர் காதலிக்கும்போது, அதுதான் அவர்களது உறவின் தொடக்கம். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும்போது, அது அவர்களது வாழ்வின் கொண்டாட்டம் மட்டுமல்ல, அவர்களது உறவின் தீவிரத்தை இந்த உலகத்துக்குச் செய்யும் அறிவிப்பும் கூட.

இந்த ஆண்டு எனக்கு வயது நாற்பதை நெருங்குகிறது. இந்தக் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு நமது வாழ்க்கை குறித்த அதிக புரிதல்களையும், நமக்கான முன்னுரிமைகளையும் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. என்னைப் பொறுத்தவரை இந்த 4 மாதங்களும், உணர்ச்சிகளும், ஏற்ற இறக்கங்களும், கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருந்தது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு ஏற்ற சரியான ஆணைத் தேர்ந்தெடுப்பது குறித்து ஒரு கனவு இருக்கும். என்னுடைய கனவு நனவாகியிருக்கிறது.

https://twitter.com/vanithavijayku1/status/1273344393236209664

பீட்டர் பால்.

அவர் என்னுடைய கனவிலிருந்து வெளியேறி என் வாழ்க்கையில் நுழைகிறார். எனக்கே தெரியாத வெற்றிடத்தை நிரப்பியுள்ளார். அவருடன் இருக்கும்போது பாதுகாப்பாகவும், முழுமையாகவும் உணர்கிறேன். என் வாழ்வில் ஒரு நண்பராக வந்த அவர், ஊரடங்கின்போது என்னுடைய யூ டியூப் சேனலின் தொழில்நுட்பப் பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாமல் நான் தொலைந்துபோன சமயங்களில் எனக்கு உதவி செய்தார். நான் மிகவும் நிம்மதியாக, அமைதியாக இருக்கும் வகையில் பிரச்சினைகளைச் சரி செய்தார். என் குழந்தைகள்தான் எப்போதும் என்னுடைய முன்னுரிமை என்பதை நீங்கள் அறிவீர்கள். என்னைத் திருமணம் செய்துகொள்வது பற்றி என்னிடம் அவர் கேட்டபோது எனக்கு வார்த்தைகள் வரவில்லை. (ஆனால் என் மனத்துக்குள் நான் ‘சரி’ என்று கத்தினேன்).

என் குழந்தைகளிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அவர் அவர்களிடம் சென்று கேட்டபோது அவர்களும் சரி என்று சந்தோஷத்தில் கத்தினார்கள். அவர்கள் இதைக் கூறியதும் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதுதான் என் வாழ்க்கையில் நடந்த சிறந்த தருணம். அவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் அவர் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒற்றைத் தாயாக இருப்பது என்பது நான் தேர்ந்தெடுத்ததோ அல்லது சாதித்ததோ அல்ல. அது ஒரு நீண்ட வலிமிகுந்த ஒரு போராட்டம். குறிப்பாக என்னுடைய குடும்பம் என்று சொல்லப்படுபவர்களிடமிருந்து எனக்கு எந்தவித ஆதரவோ உதவியோ கிடைக்கவில்லை.

என்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் மகிழ்விக்கும் விதமாக நான் என் வாழ்க்கையை வாழ்ந்தேன். இதனால் முடிவுகளை எடுப்பதில் குழப்பங்களும் பயமும் இருந்தது. முதல் முறையாக எனக்காகவும், என்னுடைய மகிழ்ச்சிக்காகவும் நான் என் வாழ்க்கையை வாழ முடிவெடுத்துள்ளேன். வாழ்க்கையை முழுமையாக வாழவும், என்னுடைய கரங்களை என்றென்றும் பற்றிப்பிடிக்கும் ஒருவரையும் தேர்ந்தெடுத்துள்ளேன்.

என்னுடைய கடினமான காலங்களில் எனக்கு ஆதவரளித்து என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களில் எனக்காக நீங்கள் மகிழ்வீர்கள் என்பதை நான் அறிவேன். உங்கள் ஆசீர்வாதமே எனக்கு முக்கியம்.

பீட்டர் பால் யார் என்று கேட்பவர்களுக்காக…

அவர் ஒரு தொழில்முறை இயக்குநர். என் இதயத்தைத் திருடி காதலில் விழவைத்த அன்பான, அளிமையான, பாசமான, நேர்மையான ஒரு மனிதர். மிக விரைவில் அவரது படைப்புகளைத் திரையில் நீங்கள் காண்பீர்கள்.

அனைத்து சிங்கிள்களுக்கும் மனமார்ந்த ஒரு அறிவுரை. நீங்கள் கண்டுபிடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஏற்ற ஒருவரைத் தொடர்ந்து தேடுங்கள். உங்களுக்காக ஒரு மாயாஜாலம் காத்துக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் தனிப்பட்ட நிகழ்வாக எங்கள் திருமணம நடக்கவுள்ளது. என்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடக நண்பர்களுக்காக திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நாங்கள் திருமணத்துக்குப் பிறகு வெளியிடுவோம்”.

இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.