சென்னை: பீகாரில் ஆட்சியை தக்க வைத்துள்ள முதல்வர் நிதிஷ்குமாருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தத் தேர்தலின் முடிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்களையும், பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் மூடிமறைத்துவிடாது என்றும் சாடியுள்ளார்.

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.  வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. இதையடுத்து முதல்வர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில்,  பீகாரில் மீண்டும் வெற்றியை வசப்படுத்தியுள்ள நிதிஷ்குமாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில் கடினமாக உழைத்த தேஜஸ்வி யாதவுக்கும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிஹார் சட்டமன்றத் தேர்தல் முடிவு அனைவருக்குமான பாடம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது x பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  “பீகார் தேர்தல் முடிவுகள் அனைவருக்குமான பாடம். மூத்த தலைவர் நிதிஷ்குமாருக்கு வெற்றிக்காக நான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், பீகார் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அவர் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். அதேபோல், இளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் ஓய்வில்லாத பிரச்சாரத்தையும், முயற்சியையும் நான் பாராட்டுகிறேன்.

‘தேர்தல் முடிவுகள் என்பவை நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைதல், கூட்டணிகள், தெளிவான அரசியல் செயல்பாடுகள் மற்றும் இறுதி வாக்குப்பதிவு வரை அர்ப்பணிப்புடன் கூடிய நிர்வாகம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இந்தியா கூட்டணியின் தலைவர்கள், இந்தத் தேர்தல் செய்தியைப் புரிந்துகொண்டு, உருவாகி வரும் சவால்களை எதிர்கொள்ள வியூக ரீதியாகத் திட்டமிடக்கூடிய அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் ஆவர்.

இந்தத் தேர்தலின் முடிவு, இந்திய தேர்தல் ஆணையத்தின் தவறான செயல்களையும், பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் மூடிமறைத்துவிடாது.  தேர்தல் ஆணையத்தின் மதிப்பு மிகக் குறைந்த நிலையில் உள்ளது. இந்த நாட்டின் குடிமக்கள், வலுவான, மேலும் பாரபட்சமற்ற ஒரு தேர்தல் ஆணையத்தை பெற உரிமையுடையவர்கள். அத்தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வெற்றி பெறாதவர்களிடம்கூட நம்பிக்கையைத் தூண்டும் வகையில் இருக்க வேண்டும்”

இவ்வாறு கூறியுள்ளார்.

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!