டில்லி
இந்தியர்கள் மீது பாகிஸ்தான் நடத்தும் வன்முறை தாக்குதலை தாம் பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தொடர்ந்து கூறி வருகிறார். அத்துடன் இந்தியா அமைதிப் பேச்சு வார்த்தைக்காக ஒரு அடி எடுத்து வைத்தால் பாகிஸ்தான் இரு அடிகள் எடுத்து வைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து இந்தியாவில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகிறது. இதை பாகிஸ்தான் கண்டிக்காதது இந்திய மக்களிடையே அதிருப்தியை அளித்துள்ளது. மேலும் பாகிஸ்தானின் வன்முறை ஆதரவுப் போக்கினால் அந்நாட்டுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த இந்திய அரசு மறுத்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ராகுல் காந்தி, “பாகிஸ்தானுடனான அமைதியா உறவை நான் வரவேற்கிறேன். ஆனால் பாகிஸ்தான் நாட்டினர் அப்பாவி இந்தியர்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்துவதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது” என தெரிவித்துள்ளார்.