சேலம்:  முதலமைச்சர் என்ற நினைப்பு எனக்கு இல்லை என்றும் மக்கள் சேவகனாகவே  பணியாற்றி வருகிறேன் என்று சேலத்தில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உருக்கமாக கூறினார்.

தமிழகம் முழுவதும் 2000 அம்மா கிளினிக்குகள் திறக்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர், முதல்கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் அம்மா கிளினிக்குகளை திறந்து வைத்து வருகிறார். ஏற்கனவே சென்னை  உள்பட சில மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள நிலையில், சேலத்தில் முகாமிட்டுள்ள முதல்வர், சேலத்தில் முதல் கட்டமாக 34 கிளினிக்குகளை திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டத்தில் மட்டும் 100 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட உள்ளது.

முன்னதாக நேற்று தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை முதல்வர் திறந்து வைத்துள்ளார். தொடர்ந்து, சேலம் முத்துநாயக்கன்பட்டியில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  கிராமப்புற பொதுமக்கள்  காய்ச்சல், தலைவலி மற்றும் சிறிய நோய்களால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் உடனடி சேவை வழங்கும் வகையில், அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அதை  பயன்படுத்தி தங்களை குணப்படுத்திக் கொள்ளலாம் எனவும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கும் அனைத்து மருந்துகளும் அம்மா மினி கிளினிக்கில் வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், ஏழை எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடங்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளதாகவும், உழைக்கும் வர்க்கத்திற்கு விவசாயி, விவசாயத் தொழிலாளர்களுக்கும் நல்ல மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் பிறந்து நான் பட்ட கஷ்டத்தை இன்று யாரும் படவிடமாட்டேன். கஷ்டத்தை உணர்ந்தவர்களுக்கு தான் திட்டத்தின் நன்மை தெரியும் என்றவர், நான் முதலமைச்சராக இல்லாமல் மக்கள் சேவகனாக பணியாற்றி வருகிறேன். முதலமைச்சர் என்ற நினைப்பு எனக்கு எப்போதும் இருந்ததில்லை. மக்களுக்கான சேவையே முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.