சென்னை: மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதி நான்தான் என்று சுவாமி நித்யானந்தா அறிவித்து உள்ளார். இதையடுத்து, மதுரை  ஆதினம் அருணகிரிநாதன் பயன்படுத்திய அறைக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நல குறைவால் மதுரை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், தன்னை அடுத்த மடாதிபதியாக சித்தரித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கைலாசா என தனி நாடு அமைத்து ஆட்சி செய்து வரும் நித்தியானந்தா மீது பல்வேறு பாலியல் புகார்கள் உள்ளன. இருந்தாலும் அவரை இதுவரை காவல்துறை கைது செய்ய முடியவில்லை.

தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் கடந்த 2012 -ம் ஆண்டு,  மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக நித்தியானந்தா என அறிவித்தார். இதையடுத்து அவருக்கு மகுடம் சூட்டி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் மதுரை ஆதீனம். ஆனால், இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, மதுரை ஆதீனம் இளைய மடாதிபதி நித்தியானந்தா என்ற  அறிவிப்பை வாபஸ் பெற்றார். அதோடு, `இந்த வழக்கில் தொடர விருப்ப மில்லை’ என்றும் அறிவித்து வெளியேறினார். 

ஆனால்,  நித்தியானந்தா தாக்கல் செய்த மனுவில் தன்னை, `மதுரை ஆதீனத்தின் 293- ம் மடாதிபதி’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கான சில ஆவணங்களை யும் தாக்கல் செய்தார். இதற்கு மறுப்புத் தெரிவித்த மதுரை ஆதீனம். `நித்யானந்தா, மடத்தில் தங்கியிருந்த கொஞ்ச நாள்களில் முறைகேடாகத் தன்னை ஏமாற்றி சில ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும், மடாதிபதியாக அறிவித்ததாகப் போலி ஆவணங்கள் தயாரித்ததாகவும்’ குற்றம் சாட்டி பதில் மனுத்தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், தற்போது மதுரை ஆதினத்தின் உடல்நிலை சீரியசாக இருப்பதால்,  மதுரை ஆதின மடத்தின் 293வது குருமகா சன்னிதானமாக தன்னை அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மீக ரீதியான, மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் நித்யானந்தா.

மதுரை ஆதீனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் மடத்தில் உள்ள அவரது அறையை வேறு யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்ற காரணத்திற்காக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் மடத்தின் சொத்து விபரங்கள் அடங்கிய பத்திரங்கள், விலை உயர்ந்த நகைகள் முக்கிய ஆவணங்கள் உள்ளதால் தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை ஆதின மடாதிபதியாக அறிவித்துள்ள நித்யானந்தா கைலாசா நாட்டை விட்டு மதுரைக்கு வருவாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…