புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் அனுமதித்தால், அவர்களுடைய உடைமைகளை (சுமைகள்) சுமந்துசெல்ல தயார் என்று தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில், நடுவழியில் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடினார் ராகுல்காந்தி.
அவரின் இந்த செயலை நாடகம் என்று கேலி செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழிலாளர்களின் சுமைகளை ராகுல் சுமந்து சென்றிருக்கலாம் என்று தொழிலாளர்களின் துயர் துடைப்பதைப் பற்றி கவலையின்றி கிண்டல் செய்திருந்தார்.
அதற்குத்தான் இவ்வாறு பதிலளித்துள்ளார் ராகுல் காந்தி. செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியுள்ளதாவது, “அந்த தொழிலாளர்கள் என்னை அனுமதித்திருந்தால் நான் அவர்களின் சுமைகளை சுமந்து சென்றிருப்பேன். ஆனால், அவர்கள் என்னை அனுமதிக்கமாட்டார்கள்.
நான் அவர்களின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். அவர்களுக்கு உதவி செய்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது. அவர்கள்தான் நமது வலிமை மற்றும் அவர்கள்தான் நமது எதிர்காலம்.
இதை நாடகம் என்று சொல்வது அவரின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. நிதியமைச்சர் அனுமதித்தால், நான், உத்திரப்பிரதேசத்திற்கு நடந்தே சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார்” என்றுள்ளார் காங்கிரஸ் தலைவர்.