சென்னை: தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளிதழ் ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், “மக்களவைக்கான ஆள் நான் இல்லை” என்று கூறியதுடன், பாஜக, காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளும் மாநில உரிமைகளுக்காக நிற்காது என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல இந்த முறையும் தனித்தே களமிறங்குகிறது.
இந்த நிலையில், தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பல்வேறு கேள்விகளுக்கு அதிரடி பதில்களை தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தேர்தலில் எப்போதும் தனித்து போட்டியிடுவதற்கான காரணம் என்ன?
தனித்துவமான கொள்கையை முன் வைக்கும்போது தனித்து தான் போட்டியிட வேண்டும். மாற்று அரசியல் என்பது ஆளும் திராவிட கட்சிகள், இந்திய கட்சிகளின் ஆட்சி, அரசியல் கோட்பாடுகளில் இருந்து மாற்றாக இருக்க வேண்டும். மலைகளை வெட்டி விற்பவர்களிடமும், ஊழல், லஞ்சத்தில் ஊறி திளைப்பவர்களிடமும் எப்படி கூட்டணி அமைக்க முடியும்? தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழந்துவிடக் கூடாது.
2024 மக்களவைத் தேர்தலில் சீமான் போட்டியிடாததற்கு காரணம் ஏதும் உண்டா?
மக்களவைத் தேர்தலில் என்னைவிட திறமை வாய்ந்த, தகுதியுடைய வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தியிருக்கிறேன். மக்களவைக்கான ஆள் நான் இல்லை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரும்பாலும் மக்களவையிலேயே இருந்து வேலை செய்து வந்ததால் அவரதுகட்சி தமிழகத்தில் வளராமலேயே போய்விட்டது. சட்டப்பேரவைக் குள் அவர் நின்று பேசியிருந்தால் இன்றைக்கு மதிமுகவை அடித்துக்கொள்ள வேறு எந்த கட்சியும் இருந்திருக்காது.
3 பெரிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியால் வெற்றி பெற முடியுமா?
தேர்தலில் தனிக்கட்சியாக நிற்கும்போது அக்கட்சியை மக்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்றே நினைப்பார்கள். ஆனால் மக்கள் அக்கட்சியை மறக்க மாட்டார்கள். கூட்டணி அமைத்திருந்தால் 5 அல்லது 6 எம்பி சீட்டுகள் நின்று வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் மக்களை முழுமையாக நம்பாதவர்கள் தான் கூட்டணிக்கு செல்வார்கள்.
நான் மக்களை முழுமையாக நம்புகிறேன். தேர்தலில் 1.1 சதவீதம் வாக்கு வாங்கிய கட்சி மறுபடியும் வளர்ந்ததே கிடையாது. ஒன்று அழிந்துவிடும் அல்லது வேறு கூட்டணிக்கு சென்றுவிடும். ஆனால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. எனவே இந்த முறை உறுதியாக நாங்கள் வெல்வோம்.
நாம் தமிழர் கட்சி சந்திக்கும் தோல்விகளை எப்படி பார்க்கிறீர்கள்?
தோல்விதான் வெற்றியின் தாய். எளிதில் வென்றவனின் இதயம் மலரினும் மெலிதாக இருக்கும். ஆனால் தோற்று தோற்று வென்றவனின் இதயம் இரும்பை விட உறுதியாக இருக்கும்.
கரும்பு விவசாயி சின்னம் இன்றி தேர்தல் களம் காண்பது எப்படி இருக்கிறது?
இந்தியாவில் சின்னம் இல்லாத தேர்தலை நடத்த முன்வர வேண்டும். வெளிநாடுகளைப் போல எண் முறைக்கு நாமும் வரவேண்டும். அல்லது ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு சின்னத்தை புதிதாக கட்சிக்கு ஒதுக்க வேண்டும். கூட்டணியில் இருந்தால் அந்தந்த கட்சிகளுக்கு அவர்கள் சின்னம் கிடைத்து விடுகிறது. ஆனால் எங்களுக்கு கிடைக்க வில்லை. எனில் ஜனநாயகத்தில் எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதில்லை.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, பாஜக என இரு கட்சிகளும் தேர்தல் அரசியல் செய்கின்றனவா?
கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்டு வந்து ஓட்டு கேட்டால் கூட பரவாயில்லை. ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீட்போம் என்று சொன்னால் எப்படி? இப்போது தான் இவர்கள் கண்களுக்கு கச்சத்தீவு தெரிகிறது. இது முழுக்க முழுக்க தேர்தல் அரசியலாகும்.
பிரதமர் மோடியின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. பாஜகவுக்கு, கர்நாடகம் வரை வந்துவிட்டோம், தமிழகத்தையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற கனவு இருக்கிறது. எளிதாக கைப்பற்றி விடலாம் என்று நினைக் கின்றனர். ஆனால் காங்கிரஸ், பாஜக போன்ற இந்திய கட்சிகள் தமிழகத்துக்கு தேவையில்லை. இந்த 2 கட்சிகளும் எந்த மாநிலத்தின் உரிமை களுக்காகவும் நிற்க மாட்டார்கள்.
பாஜகவுக்கு எதிரான வாக்குகள், திமுகவுக்கு செல்லாமல் தடுப்பதுதான் உங்களது நோக்கம் என்று கூறப்படுவது பற்றி?
நான் பாஜகவின் பி-டீம் என கூறி எனக்கு வரவேண்டிய வாக்குகளை திமுகதான் தடுக்கிறது. உண்மையை சொல்ல வேண்டுமானால் திமுகதான் பாஜகவின் பி-டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. என்னை பாஜகவின் பி-டீம் என்றால் என்னிடம் ஏன் என்ஐஏ சோதனை நடத்தப்பட வேண்டும்? ஏன் எனது கட்சி சின்னம் பறிக்கப்பட வேண்டும்? நான் வளர வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு 4 பேரும் சம எதிரிகள் தான்.
தேர்தலில் அதிகமாக செலவு செய்யும் வேட்பாளர்கள்தான் வெற்றிபெறுவார்கள் என்று நிலவும் கண்ணோட்டம் குறித்து?
மக்கள் ஓட்டுக்காக காசு கேட்பதை வாழ்வியல் முறையாக கொண்டு வந்தது திராவிட கட்சிகள்தான். பணம் வைத்திருப்பவர்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைமை வந்தால், முதலாளிகளுக்கான அரசியல் மட்டுமே கட்டமைக்கப்படும். மக்களுக்கான ஆட்சி கேள்விக் குறியாகிவிடும். இதனை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சிக்கான நிதி குற்றச்சாட்டு குறித்து?
வெளி நாட்டில் இருந்து எனக்கு அதிக நிதி வந்திருந்தால் வருமான வரித்துறை அல்லது அமலாக்கத்துறை சோதனைகள்தானே என் மீது நடத்தப் பட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து என்ஐஏ சோதனை ஏன் நடத்தப்பட்டது? திரள்நிதி திரட்சி மூலம் திரட்டப்படும் நிதி மூலமாகவே கட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதில் இருந்துதான் கட்சிக்கான செலவீனங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
பாஜக, காங்கிரஸ் கட்சிகளால் நமது வாழ்நாளில் 20 ஆண்டுகள் வீணடிக்கப்பட்டு விட்டன. மாற்றம் என்பது வெறும் சொல்லாக மட்டுமில்லாமல் செயலாகவும் இருக்க வேண்டும். அதன்படி ஊழல், லஞ்சம், பசி, பஞ்சம், வறுமை, மது இல்லாத மாற்றத்தை மக்கள் விரும்பினால் நாம் தமிழருக்கு வாக்களிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: இந்து தமிழ் திசை’