சென்னை:

யன்தாரா விவகாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்று கூறினார்.

நடிகர் ராதாரவி ஆரம்பகால கட்டத்தில் திமுகவில் இருந்து பின்னர் அதிமுகவுக்கு தாவினார். அதைத்தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் பதவி வகித்தார். பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி,  பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம் என நயன்தாரா குறித்து கருத்து தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக  நீக்குவதாக அறிவித்தது.

ஆனால், ராதாரவி,  நீங்கள் என்ன என்னை நீக்குவது நானே கட்சியிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு திமுகவிலிருந்து விலகினார் ராதாரவி. இதையடுத்து கடந்த  2 மாத காலமாக அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகியிருந்த ராதாரவி இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

அதிமுகவில் இணைந்துள்ளது குறித்து பேசிய ராதாரவி,  அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  திரைப்பட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.ராதாரவி அவர்கள் கழக இணை ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து இன்று தன்னை கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார் என்று பதிவிட்டுள்ளார்.