சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நடிகர் விஷால், நான் அரசியல் வாதியல்ல, மக்கள் பிரதிநிதி என்று கூறி உள்ளார்.
ஜெ.மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.
ஏற்கனவே திமுக, அதிமுக, நாம் தமிழர், டிடிவி தினகரன் உள்பட சில சுயேச்சைகளும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று பாஜ சார்பில் கருநாகராஜனும், சுயேச்சையாக நடிகர் விஷாலும், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
இந்நிலையில், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள விஷால், தி.நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்திற்கு சென்று, அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், நான் அரசியல்வாதி அல்ல. மக்கள் பிரதிநிதி யாகவே இந்த தேர்தலில் மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். என்னை யாரும் இயக்க வில்லை. ஆர்.கே.நகர் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும், மக்களின் தைரியம் தான் எனக்கு ஆதரவு என்றார்.
மேலும், யாருடைய வாக்கு வங்கியையும் பிரிப்பதற்காக நான் தேர்தலில் போட்டியிட வில்லை. எனக்கு 100 சதவீதம் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்ற அவர், ரஜினி, கமல் என யாரிடமும் ஆதரவு கேட்க மாட்டேன் என்றும் அதிரடியாக கூறினார்.
மேலும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு, மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.