பெங்களூரு: 

சொத்துக்குவி்ப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பை உறுதி செய்ததை தொடர்ந்து சசிகலா பெங்களூரு சிறையில் நேற்றுமுன் தினம் அடைக்கப்பட்டார். சசிகலா சிறை சென்றதிலிருந்து அவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்  ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன.

சிறைச்சாலைக்கு வந்த சசிகலாவை “ஜீப்பில் ஏறுங்கள் செல்லுக்கு அழைத்துச் செல்கிறோம்” என்று சிறை அதிகாரிகள் கேட்க அதற்கு சசிகலா கோபத்துடன், “நான் என்ன திருடியா?..ஜீப்பில் உட்காரமாட்டேன். செல்லுக்குள் சென்றுதான் அமர்வேன். எவ்வளவு தூரம் என்றாலும் நடந்துவருகிறேன்” என்று பிடிவாதம் செய்துள்ளார். அப்போது சசியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்ததாம். சிறை அதிகாரிகளே மிரண்டு விட்டதாக கூறுகிறார்கள்.

ஏற்கனவே இவர் இதே சிறையில் ஜெயலலிதாவுடன் அடைக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதா முன்னாள் முதலமைச்சர் என்பதாலும் உடல் பிரச்னை இருந்ததாலும், அவருக்கு ஏ கிரேட் சிறையும், வசதிகளும் கொடுக்கப்பட்டிருந்தன.

நெல்லுக்குப் பாயும் தண்ணீர் புல்லுக்கும் பாயும் என்பதைப்போல் ஜெயலலிதா உடன் இருந்ததால் சசிகலாவும் அனைத்து வசதிகளையும், சலுகைகளையும் அனுபவித்தார். அந்த வசதிவாய்ப்புகள் இப்போதும் கிடைக்கும் என நம்பிய சசிகலாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

நீதிமன்றமும் சசிகலாவுக்கு விஐபி அந்தஸ்து வழங்க மறுத்துவிட்டதோடு சிறப்புச் சலுகைகளை அனுபவிக்க எந்தத் தகுதியும் உங்களுக்கு இல்லை என்றும் கூறியுள்ளது.

இது அவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள்.

10க்கு 8 அடி செல்லுக்குள் சசிகலாவும், இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் சசிகலாவால் தூங்க முடியவில்லை என்றும் எப்போதும் முகத்தை கோபத்துடன் வைத்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.