மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையத்தை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சென்னையில் இன்று துவங்கியது, இதேபோன்று தமிழகம் முழுவதும் 100 நிலையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் துவங்கியுள்ள மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை (EV) சார்ஜிங் செய்யும் இந்த 150 கிலோவாட் மற்றும் 30 கிலோவாட் கனெக்டர்களை உள்ளடக்கிய சார்ஜிங் நிலையம் 180 kW (கிலோவாட்ஸ்) திறன் கொண்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இதேபோல் 100 துரித சார்ஜிங் நிலையங்களை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“மனிதகுலத்திற்கான முன்னேற்றம்’ என்ற ஹூண்டாய் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, அனைத்து EV பயனர்களின் வசதியையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், எனவே எங்கள் சார்ஜிங் நிலையங்களை எந்த நான்கு சக்கர வாகன EV பயனரும் பயன்படுத்தலாம்” என்று கார்ப்பரேட் திட்டமிடல் நிர்வாக இயக்குநர் ஜே வான் ரியூ கூறினார்.

EV வாகன உரிமையாளர்கள் myHyundai செயலி மூலம் சார்ஜிங் வசதியை அணுகலாம் என்று தெரிவித்துள்ள அந்நிறுவனம், சார்ஜிங் நிலையத்தின் இருப்பிடம், செல்லும் வழி மற்றும் சார்ஜிங் ஸ்லாட்டுகளை முன்பதிவு செய்தல், டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் தொலைநிலை சார்ஜிங் நிலையைக் கண்காணித்தல் போன்றவற்றை இந்த செயலி மூலம் பெறமுடியும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், ஃபாஸ்ட் பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷனைத் தவிர, தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் 170 சார்ஜிங் பாயின்ட்கள் வாடிக்கையாளர் வசதிக்காக myHyundai செயலியின் “EV சார்ஜ்” உடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.