ஐதராபாத் நகரில் முஸ்லிம் குடும்பங்களில் பெண் குழந்தைகள் அரபு ஷேக்குகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் அவலம் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அரபு ஷேக்குகள் இதற்காகவே தங்கள் நாடுகளிலிருந்து புறப்பட்டு ஐதராபாத் வருகின்றனர். முன்பு கேரளாவில் கோழிக்கோடு இதற்கு புகழ்பெற்ற இடமாக விளங்கியது. கேரள அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் பயனாக அங்கு இது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதற்கான சமூக, பண்பாட்டு காரணங்கள் குறித்து நாம் விரிவாக ஆராய வேண்டும். வெறுமனே ஒரு குடும்பம் சார்ந்த பிரச்சினையாக நாம் இதை பார்க்க முடியாது.
இஸ்லாத்தை பொறுத்தவரை ஆரம்ப காலங்களில் பருவமடையாத குழந்தைகளை திருமணம் செய்து வைத்தல் என்பது பரவலாக வழக்கில் இருந்தது. ஆரம்ப கால அரபு பழங்குடியினரின் வழக்கத்தை, சமூக ஒழுங்கு முறையை முன் மாதிரியாகக்கொண்டு இந்த நடைமுறை தலைமுறை தலைமுறையாக பிற பிரதேசங்களிலும் பின் தொடர்ந்தது.
இந்தியாவில்/ தமிழ்நாட்டில் எல்லா சமூகங்களிலும் 50 மற்றும் 60 கள் வரை இந்த பருவமடையா குழந்தை விவாக நடைமுறை வழக்கில் இருந்தது. குழந்தை இரண்டாம் வகுப்பை நிறைவு செய்தவுடன் அதாவது அதன் ஏழு வயதில் அந்த குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பார்கள். கணவர் வீட்டிற்கு சென்ற பிறகு தான் அந்த குழந்தை பருவ வயதை அடையும். அப்புறம் தான் உடலுறவு செயல்பாடு.
பழங்குடி சமூகங்களின் சமூக பண்பாட்டு இயங்கியல் சார்ந்த நடைமுறை இது. பெண் குழந்தைக்கு ஏழு வயதானால் அந்த பெண் குழந்தையை திருமணம் செய்யும் ஆண் குழந்தைக்கு பத்து வயதாக இருக்கும். ஆக இருவருக்கும் மனமுதிர்ச்சியோ, உடல் முதிர்ச்சியோ இருக்காது.
பருவமடைந்த பின் உடலுறவு குறித்த அறிவை எட்டுவதற்கு அவர்களுக்கு சில காலம் பிடித்தது. அதே நேரத்தில் இது குறித்து அவர்களுக்கு போதிப்பதற்கு உறவினர்கள் சிலர் இதற்காகவே நியமிக்கப்பட்டார்கள்.
இந்நிலையில் இந்திய அரசின் குழந்தை திருமண சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இந்தியாவின் பல பகுதி களில் இந்த குழந்தை திருமண நடைமுறை இன்னமும் வழக்கில் இருக்கிறது.
சமீபத்திய புள்ளிவிபரப்படி இந்து சமூகங்களில் 41.5 சதவீதமும் , இஸ்லாமிய சமூகங்களில் 40.30 சதவீதமும் குழந்தை திருமணம் வழக்கத்தில் இருக்கிறது.
உண்மையில் இந்து – முஸ்லிம் சமூக பரவலாக்கம் மற்றும் விகிதாச்சார அடிப்படையில் பார்த்தால் முஸ்லிம் சமூகத்தில் தான் இந்த நடைமுறை அதிகமாக இருக்கிறது எனலாம்.
இதற்கு மத அடிப்படைவாதமும், பழமையும் தான் மிக முக்கிய காரணம். அது தான் ஐதராபாத் போன்ற நகரங்களில் இந்த சீரழிவு பண்பாடு இன்னமும் தொடர காரணம்.
அரபு நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிப்பு, அதனை ஒட்டிய பொருளாதார வளர்ச்சி, காலனியத்தின் பிடிகளில் இருந்து வளைகுடா மற்றும் பிற அரபு நாடுகள் விடுதலை பெற்றது போன்ற அம்சங்கள் அங்குள்ளவர்களின் வாழ்க்கைப் போக்கில் முக்கிய மாறுதல்களை ஏற்படுத்தின.
குறிப்பாக அங்குள்ள ஆண்களின் வாழ்க்கை தரத்திலும், பண்பாட்டு நடவடிக்கைகளிலும் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே அங்குள்ளவர்களுக்கு மதம் சார்ந்து ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்ய அனுமதி இருப்பதால் பெண்கள் சார்ந்த உடலியல் தேடல் அவர்களிடம் பிரிக்க முடியாத அம்சமாக மாறியது.
அறுபதுகளில் சுதந்திரம் அடைந்த வளைகுடா நாடுகளில் பெட்ரோலிய பொருளாதாரம் காரணமாக வளர்ச்சி பெருகி அங்குள்ளவர்களிடம் செல்வம் பெருகியது. இதன் காரணமாக அவர்கள் தங்களிடம் தேங்கிய உபரி செல்வத்தை செலவு செய்ய பல நாடுகளுக்கும் சென்றனர்.
அங்கெல்லாம் அவர்களுக்கு கேளிக்கை தேவை யான ஒன்றாக இருந்தது. இந்நிலையில் ஆரம்ப கால இஸ்லா மில் குடும்பத்தை விட்டு தொலை தூரங்களுக்கு செல்லும் வணிகர்களுக்காக தற்காலிக திருமணம் என்பது வழக்கில் இருந்தது.
அதாவது குடும்பத்தை விட்டு விட்டு நெடுந்தூரத் திற்கு பிரயாணம் செய்யும் ஒருவர் தான் தங்கும் இடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவளுடன் தற்காலிகமாக குடும்பம் நடத்தலாம். இதற்கு முத்ஆ என்று பெயர்.
இம்மாதிரியான திருமணங்கள் அரேபியாவில் கி.பி எட்டாம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்தன. அதன் பிறகு அந்த முறை தடை செய்யப்பட்டது. அதே நேரத்தில் தடை செய்யப்படாத பிற பகுதிகளில் இம்முறை தொடர்ந்தது.
மேலும் ஷியா முஸ்லிம்கள் இந்த தடை உத்தரவை மீறி இது ஆரம்ப கால இஸ்லாமின் வழக்கம். ஆகவே இதை எவராலும் தடை செய்ய முடியாது என்றனர். வஹ்ஹாபிய மரபின் ஒரு பகுதியினரும் இதை தற்போதும் கடைபிடிக்கின்றனர். இது தான் பல்வேறு வடிவங்களில் தற்போதும் தொடர்கிறது.
இஸ்லாத்தின் ஒரு பகுதியினரின் தற்காலிக திருமண நம்பிக்கை, மற்றவர்களையும் தொடர செய்கிறது. அவர்கள் தங்களுக்கான நியாயப்பாட்டை வரலாற்றிலிருந்து உருவாக்கிக்கொள்கின்றனர்.
ஐதராபாத் என்பது இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நகரம். அறுபதுகளுக்கு பிறகு இங்கு அரபு நாட்டினர் வணிகம், கேளிக்கை, சுற்றுலா என பல்வேறு விஷயங்களுக்காக வருகை புரியத்தொடங்கினர்.
இந்நிலையில் தங்களின் வருகையின் போது ஆரம்ப கால இஸ்லாமின் வழக்கப்படி தற்காலிக திருமணம் செய்து கொள்ள விரும்பினர். பணம் படைத்த உயர்வர்க்கத்தினர் எப்போதுமே கேளிக்கை சார்ந்து அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். காரணம் அவர்களிடம் தங்கியுள்ள உபரி செல்வம் தான். இது உலகளாவிய உண்மை.
இதனடிப்படையில் ஐதராபாத்திற்கு வருகை தரும் அரபிகள் தங்களின் கேளிக்கையின் ஒரு பகுதியாக ஐதராபாத் பெண்களை மணம் முடிக்க விரும்பினார்கள். இதற்காக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க தொடங்கினர்.
இதற்காகவே ஐதராபாத் நகரில் இடைத்தரகர்கள் உருவாயினர். அவர்கள் மூலம் ஏழ்மையில் வாடும் முஸ்லிம் பெண்கள் குறி வைக்கப்பட்டனர். அவர்களின் வறுமையை சாதகமாக எடுத்துக் கொண்டு அந்த பெண்களை திருமணம் செய்து கொண்டனர். இதற்காக பல லட்சங்கள் கொட்டப்பட்டன.
எப்போதுமே அரபு அல்லாத நாட்டு முஸ்லிம்களுக்கு அரபு நாட்டவர் என்றால் நம்மை விட உயர்ந்தவர் என்ற எண்ணம் உண்டு. குறிப்பாக இந்தியாவில் இது மிக அதிகம். அதுவும் இதனோடு சேர்ந்து கொண்டதன் காரணமாக இந்த பெண்களின் குடும்பத்தினரும் இதற்கு சம்மதித்தனர்.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் தற்காலிக திருமணம் என்ற அம்சம் இங்கு செல்லுபடியாகாத காரணத்தால் பெண்கள் நிரந்தர திருமணம் என்ற பெயரில் அரபிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் சில காலம் அந்த பெண்களுடன் வாழ்ந்து விட்டு தங்கள் விசா காலம் முடிந்தவுடன் தங்கள் நாடுகளுக்கு பறந்து விடுவார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட பெண்களிடம் திரும்பி வருவதாக தகவல் சொல்லி விட்டு செல்பவர்கள், தகவல் சொல்லா மல் ரகசியமாக தப்பிப்பவர்கள், உன்னை அங்கு கொண்டு செல்கிறேன் என்பவர்கள் என பல வகையினர் இருக்கிறார்கள்.
மேலும் சிலர் தங்கள் நாடுகளுக்கு இந்த பெண்களை அழைத்து சென்று அங்கு தனியாக தங்க வைக்கின்ற னர். அங்கு குடும்ப வாழ்க்கை என்ற பெயரில் பல்வேறு வகையான பாலியல் வன்முறைகளுக்கு அந்த பெண்கள் ஆளாக்கப்படுகின்றனர்.
இதன் தொடர்ச்சியில் தங்கள் விசா காலம் முடிந்த உடன் சம்பந்தப்பட்ட பெண்களை உடனடி முத்த லாக் மூலம் விவாகரத்து செய்து விட்டு தங்கள் நாடுகளுக்கு சென்று விடுபவர்களும் இருக்கிறார்கள். அதன் பிறகு தான் சம்பந்தப்பட்ட பெண்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.
இம்மாதிரியான திருமணம் செய்பவர்களில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம். இவர்கள் ஏற்கனவே தங்கள் நாடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து குழந்தைகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.
தாங்கள் தங்கும் இடத்தில் உருவாகும் கேளிக்கை சார்ந்த வேட்கையே இப்படியான தற்காலிக திருமணம் என்ற பெயரில் இளம் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட மிக முக்கிய காரணம். அவர்கள் தங்கள் நாடுகளுக்கு தப்பிச் சென்ற பிறகு இந்த பெண்களின் வாழ்க்கை கேள்விக்குள்ளாகிறது.
அரபு ஷேக்குகளுக்கு கொடுக்கப்பட்டவர் என்ற மோசமான இழி பட்டம் இந்த பெண்கள் மீது சக சமூகத்தால் சுமத்தப்படுகிறது. இதனால் குடும்ப வாழ்க்கை குறித்த கனவு சிதைந்த மனநிலைக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் உள்ளாகின்றனர்.
இம்மாதிரியான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு ஐதராபாத் வாழ் ஏழை முஸ்லிம் குடும்பங்களுக்கு இன்னும் வரவில்லை. இதனால் இது தொடர்கதையாகிறது. இது பற்றிய பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு ஊடகங்களில் தொடர்ந்து பதிவுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
சமீபத்தில் பி.பி.சி இணையதளம் இதனை கள ஆய்வு செய்து விரிவாக பதிவு செய்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர். பிபிசி தெலுங்கு பிரிவின் செய்தியாளர் தீப்தி பத்தினி இம்மாதிரியான திருமணங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களை சிலரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
செவிலியராக வேண்டும் என்பதே ஃபர்ஹீனுக்கு பெருங்கனவாக இருந்தது. ஆனால், ஜோர்டானை சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவருக்கு அவர் திருமணம் முடிக்கப்பட்ட போது, ஃபர்ஹீனுக்கு வெறும் 13 வயதே ஆனது. ”எனக்கு திருமணம் வேண்டாம் நான் படிக்க வேண்டும் என்று அப்போது கத்தினேன், கதறினேன், கெஞ்சினேன். ஆனால், எனது அழுகையை யாரும் பொருட்படுத்தவேயில்லை,” என்கிறார் அவர்.
மணமகள் உடையில் ஃபர்ஹீனை அவரது தயார் அலங்காரப்படுத்தினார். திருமணத்திற்காக 25,000 ரூபாயும், அதன்பிறகு மாதம் 5,000 ரூபாயும் அவர்கள் வழங்குவார்கள் என்று ஃபர்ஹீனிடம் தாயார் கூறியுள்ளார்.
முஸ்லிம் மதகுரு ஒருவர் சடங்குகளை செய்துவைக்க ஜோர்டான் நபருடன் ஃபர்ஹீனுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு ஜோடிகள் தனிமையில் இருந்தபோதுதான், மணமகனின் முகத்தை ஃபர்ஹீன் முதல்முறையாக நேரில் பார்த்துள்ளார். தன்னைவிட 40 வயது மூத்தவர் என்பதை ஃபர்ஹீன் அப்போதுதான் உணர்ந்தார்.
”அன்றைய இரவு, நான் அழுது கொண்டேயிருக்க அவன் என்னுடன் கட்டாயமாக பாலுறவு கொண்டான். அதன்பிறகு, மூன்று வாரங்கள் என்னை பாலியல் வல்லுறவு செய்தான்,” என்று அந்த கொடிய நிமிடங்களை மீண்டும் நினைவுக்கூர்ந்தாள் ஃபர்ஹீன். அதன்பிறகு, இருதரப்பிடையே ஒரு சமரசம் செய்யப்பட்டது.
முதலில் தான் ஜோர்டானுக்கு சென்று அதன்பிறகு ஃபர்ஹீனுக்கு விசா அனுப்புவதாக ஃபர்ஹீன் கணவர் தெரிவித்துள்ளார்.காலங்கள் உருண்டோடின ஃபர்ஹீனுக்கு விசா மட்டும் வரவில்லை. ஃபர்ஹீன் இன்னும் திருமணமானவர்தான் ஆனால் தன் கணவர் எங்கு இருக்கிறார் என்பது அவருக்கு தெரியாது.
”என்னுடைய பெற்றோராலே நான் ஏமாற்றப்பட்டேன். இந்த திருமண பந்தத்தை முடித்துகொள்ள கூட நான் எண்ணினேன் என்கிறார் ஃப்ர்ஹீன். ”வயது மூத்த ஆணை திருமணம் செய்ததற்காக எனது உறவினர்கள் என்னை கேலி செய்தார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று, கணவனின் ஆசைகளை திருப்திப்படுத்த முடியாததால் தான் அவர் என்னைவிட்டு சென்றுவிட்டதாகவும் வசை பாடினார்கள் ” என்கிறார் ஃபர்ஹீன்.
பர்ஹீன் மாதிரி இன்னும் ஏராளமான சிறுமிகள் இருக்கிறார்கள். இப்படி திருமணம் செய்யும் அரபி ஷேக்குகள் 18 வயதிற்கு கீழுள்ள சிறுமிகளை தான் விரும்புகிறார்கள். பாலியல் சார்ந்த வறட்டு கற்பிதம் தான் இதற்கு காரணம்.
இதனால் இளம் வயதிலேயே அந்த பிஞ்சுகள் வாழ்க்கை சீர்குலைவிற்கு உள்ளாகின்றனர். இந்தியாவில் பல காலமாக முஸ்லிம்கள் மத்தியில் தொடரும் குழந்தை திருமண நடைமுறை இதற்கு வசதியாக இருக்கிறது.
மேலும் பருவமடைந்த முஸ்லிம் பெண்களை கல்வி கற்க விடாமல் வீட்டிற்குள் பூட்டி வைப்பதும், பெண்கள் சார்ந்த வெளியுலக தொடர்பை மட்டுப்படுத்துவதும் இதற்கான மூல காரணங்களாக இருக்கிறது.
பெண்கள் பருவமடைந்து விட்டாலே திருமணத்திற்கு தகுதியானவர்கள் என்ற எண்ணமும் இதனோடு ஒட்டிக்கொள்கிறது. இதனால் அடிப்படைவாத முஸ்லிம்கள் மத்தியில் எத்தனை வயதுடைய ஆணாக இருந்தாலும் அவர்களின் பணம் மட்டுமே முன்னிலை பெறும் காரணத்தால் இது சாத்தியப்படுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் ஐதராபாத் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள் இன்றும் ஆதரவற்றவர்களாக இருக்கின்றனர். மேலும் மதரீதியாக ஆரம்ப கால இஸ்லாத்தின் வரலாற்றோடு இது நியாயப்படுத்தப்படுவதால் அரபு ஷேக்குகளுக்கு இது அநுகூலமாக போய் விடுகிறது.
ஐதராபாத் போன்றே முன்பு கோழிக்கோடு நகரிலும் இது பரவலாக வழக்கில் இருந்தது. கேரள அரசு எடுத்த உறுதியான, கடும் நடவடிக்கைகள் காரணமாக அங்கு இந்த வழக்கம் இப்போது நடைமுறையில் இல்லை.
ஐதராபாத் நகரில் இளம் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து வரும் இந்த பாலியல் சுரண்டல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அரசும் பிற ஜனநாயக சக்திகளும் மத எல்லைக்கு அப்பாற்பட்டு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அது காலத்தின் உடனடி தேவையும் கூட.
mohammed.peer1@gmail.com