கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டன.

இந்நிலையில், விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசியதால், அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா.

இந்த வழக்கு ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என சமந்தாவின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமம். உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்று யாரும் இல்லை. உங்கள் வழக்கு நடைமுறைப்படி விசாரிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும், பிரபலங்கள் பொதுத்தளங்களில் தங்களது தனிப்பட்ட விவகாரங்களைப் பகிர்ந்துவிட்டு, பின்னர் அவதூறு வழக்கிற்காக நீதிமன்றத்தை நாடுகிறார்கள் எனக் கூறிய நீதிபதி, அவதூறு வழக்கு தொடுப்பதற்கு பதிலாக சம்மந்தப்பட்ட நபர்களை நேரடியாக மன்னிப்பு கேட்க வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.