துபாய்:  ரஸ் அல் கைமா நகருக்கு  வெளியில் உள்ள கர்ரான்  பகுதி மக்கள்  இன்று  சூரிய உதயத்துடன் ஒரு மாவீரனின் நல்லடக்கம்  நடைபெற்றதையும் காண நேரிட்டது.

நேற்று துபாயில் விமானம் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை காப்பாற்ற உதவியர்களில் ஒருவரான  தீயணைப்பு வீரர்     ஜாசிம் அல் பலூஷி  வீரமரணம் அடைந்தார்.  இன்று கர்ரான்-னில் நடைபெற்ற  ஜாசிம் அல் பலூஷி வின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.
 

எரியும் விமானம்
எரியும் விமானம்

நேற்று காலை  திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எமிரேட்சின் போயிங் 777 ரக விமானம் 282 பயணிகளை ஏற்றிக்கொண்டு காலை 10.19 மணிக்கு புறப்பட்டது.300 பேர் விமானத்தில் பயணித்தனர். அமீரகத்தின் எல்லைப்பகுதியை விமானம் நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில் முன்சக்கரம் திறக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதை உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க திட்டமிட்டனர். இதையடுத்து துபாய் சர்வதேச விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அவரசத் தகவல் அனுப்பப்பட்டது.  இதைத்தொடர்ந்து  அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. துபாயில் இருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் மற்றும் ஓடு பாதைக்கு தீயணைப்பு மற்றும் ஆம்புலன்சுகள் விரைந்தன. மின்னல் வேகத்தில் செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்  விமானத்தின் உள்ளே இருந்த பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட 300 பேரையும் அவசரகால வழிகள் மூலமாக பத்திரமாக வெளியேற்றினர்.  பயணிகளில் பெரும்பாலோர் கேரள மாநிலத்தவர்.
வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர் ஜாசிம் அல் பலூஷி
வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர் ஜாசிம் அல் பலூஷி

பயணித்த அனைவரும்  உயிர் பிழைத்தது அனைவருக்கும் நிம்மதியை அளித்தது. ஆனால் இப்பயணிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களில் ஒருவரான தார் ஜாசிம் அல் பலூஷி என்பவர் வீரமரணம் அடைந்தார்.
பயணிகளை காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வீரமரணம் அடைந்த அவருக்கு துபாய் ஏர்போர்ட்டில் நேற்று முதலே அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜாசிம் அல் பலூஷி முகநூல் படம்

வீரமரணமடைந்த பலோசிக்கு இறுதிமரியாதை செலுத்த அவரது உறவினர்களும் நண்பர்களும் ராஸ் அல் கைமாவிற்கு விரைந்தனர்.
இன்று  சூரிய உதயத்திற்கு பிறகு, ஷேக் முகமது பின் சவுத் அல் கோசிமி, ராஸ் அல் கைமாவின் இளவரசர் உட்பட நூற்றுக்கணக்கானோர் ஜாசிம் அல் பலூஷியின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்.
ராஸ் அல் கைமா வில் உள்ள மசூதியில் அவரது உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
அதனை அடுத்து “அல்  சலையிஹா கல்லறைத் தோட்டத்தில்”  சிறப்பு  பிரார்த்தனை நடைபெற்றது.

வீரமரணமடைந்த அல் பலோஷிக்கு வயது 27. அவருக்கு ஹரிப் வயது 16 மற்றும் சல்மான் 22 ஆகிய இரு தம்பிகளும் இரு சகோதரிகளும் உள்ளனர்.
பலோஷியின் இறுதி அஞ்சலி செலுத்த வந்தக் கூட்டத்தினரைக் கண்டு கண்ணீர் சிந்தி நன்றி கூறினர் பலோஷியின் தந்தை இஸ்ஸா மற்றும் அவரது சகோதரர்கள்.
என் மகனின் தியாகம் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளது. அவன் ஒரு மாவீரன். அவன் பிரிவால் நாங்கள் வாடிகின்றோம்” என்றார் பலோஷியின் தந்தை இஸ்ஸா.
ஜாசிம் அல் பலூஷியின் தம்பி ஹரிப், ” என் அண்ணம் ஒரு ரோல் மாடல். அவன் இந்த நாட்டையும் அவனது பணியையும் மிகவும் நேசித்தான்” எனக் கண்ணீருடன் கூறினார்.
இன்று துபாய் போலிஸ் பணியில் சேரவிருந்த ஜாசிம் அல் பலூஷியின் தம்பி சல்மான் ” அண்ணன் மிகவும் தைரியசாலி, நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரிடமும் அன்பாக நடந்துக் கொள்வான். இன்று இந்த ஊரில் உள்ள அனைவருக்கும் என் அண்ணனின் தியாகம் தெரிந்துள்ளது. பல்வேறு அதிகாரிகளும் அவனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்” என்றார்.
ஜாசிம் அல் பலூஷியின் தாய், விமான விபத்துகுறித்து தகவல் அறிந்ததும் தன் மகனுக்குத் தொடர்பு கொள்ளுமாறு ஜாசிம் அல் பலூஷியின் மாமா முகமது இப்ராகிமிடம் கூறினார். ஆனால் ஜாசிம் அல் பலூஷியின் அலைப்பேசி அணைத்துவைக்கப்பட்டு இருந்தது.
சவுதி அரேபிய நாட்டின் தலைவர்கள் பலரும் வீரமரணமடைந்த ஜாசிம் அல் பலூஷிக்கு சமூகவலைத்தளங்களில் அஞ்சலி செலுத்தி பதிவிட்டு வருகின்றனர்.

பலரின் உயிரைக் காக்க தன்னுயிர் ஈந்த ஜாசிம் அல் பலூஷியின் ஆன்மா சாந்தியடைய பத்திரிக்கை.காம் பிரார்த்திக்கின்றது.