சென்னை: சென்னையின் பிரபலமான ஈஸ்வரன் கோவில்களில் ஒன்றான மருந்தீஸ்வரர் கோவிலிலும் நேற்று நள்ளிரவில் கொள்ளை நடைபெற்றுள்ளது. கோவில் உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையன்  கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடல்நலம் பாதிப்பு உள்ளோர், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபடும் தலமாக இருந்து வருகிறது  திருவான்மியூரில் உள்ள  மருந்தீஸ்வரர் கோவில், நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மருந்தீஸ்வரரை தரிசித்து உடல்நலம் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றிரவு வழக்கம் போல கோயிலை மூடிவிட்டுச் சென்ற நிர்வாகிகள், இன்று அதிகாலை திறந்த போது உள்ளேயிருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, திருவான்மியூர் காவல் நிலையத்தில்  புகார் அளிக்கப்பட்டது.
உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர்,  கோவிலில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த திருடன் ஒருவன், உண்டியலில் ஒரு ரூபாய் நாணயத்தை காணிக்கையாக போட்டுவிட்டு, பின்னர் அந்த உண்டியல்களை   இரும்புக்கம்பி கொண்டு உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதையடுத்து உண்டியலில் உள்ள பணம் குறித்து கோவில் நிர்வாகிகளிடம் காவல்துறையினர் விசாரித்தபோது, கொரோனா தொற்று முடக்கம் காரணமாக, ஏற்கனவே உண்டியிலில் இருந்த பணம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கடந்த சில நாட்களாக கோவில் திறந்தபிறகு பக்தர்கள் செலுத்திய உண்டியல் பணம் மட்டுமே திருடு போயிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதிக பட்சமாக ரூ.1 லட்சம் வரை திருடு போயிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கொள்ளையனை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.