தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவதும், தீ வைத்து எரிப்பதும் கர்நாடகத்தில் நடக்கும் வேளையில்… கர்நாடக பதிவெண் கொண்ட கார் விபத்தில் சிக்க.. அதில் இருந்த கன்னடர்களை மனிதாபிமானத்தோடு மீட்டு காப்பாற்றியிருக்கிறார்கள் தமிழர்கள்.
தமிழகத்துக்கு, தங்கள் காரில் சுற்றுலா வந்தது கன்னட குடும்பம் ஒன்று. இந்த நிலையில் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் வெடிப்பதை அறிந்தார்கள். ஆகவே உடனே தங்கள் மாநிலத்துக்குத் திரும்ப முடிவு செய்தார்கள்.
இங்கே தங்கள் வாகனம் தாக்கப்படுமோ என்ற பயத்துடனேதான் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். கன்னியாகுமரி – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் (தமிழக பகுதியில்) சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, கார் கட்டுப்பாட்டை இழந்ததது. இரண்டு மூன்று குட்டிகரணம் அடித்து நின்றது. காரினுள் இருந்தவர்கள், உயிர் பயத்தில் அலறினார்கள்.
உடனடியாக அக்கம் பக்கமிருந்தவர்கள், காரினுள் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தார்கள்.
வெளியே பாதுகாப்பாக கொண்டுவரப்பட்ட பிறகும் அந்த பயணிகளுக்கு பயம் போகவில்லை. ஏனென்றால், இது தமிழ்நாடு பகுதி. தாங்களோ கன்னடர்கள். ஆகவே தாக்கப்படுவோமோ என்று நினைத்து தவித்து நின்றார்கள்.
அவர்களது மனநிலையை அறிந்த அங்கிருந்த தமிழர்கள், “பயப்படாதீர்கள். உங்களை பாதுகாப்பாக உங்கள் ஊருக்கு அனுப்பி வைப்பது எங்கள் பொறுப்பு” என்று ஆறுதல் கூறினர்.
மற்ற சிலர், காரினுள் சிக்கியிருந்த பொருட்களை எடுத்து பத்திரமாக சாலை ஓரத்தில் வைத்தார்கள். இன்னொருவர் காவல்துறைக்கு போன் செய்தார்.
காவலர்கள் வந்தவுடன், விபத்துக்குள்ளான அந்த கன்னட குடும்பத்தை பாதுகாப்பாக ஒப்படைத்து விடைபெற்றனர் தமிழர்கள்.
மனிதம்!